பிரபல நடிகையும், பாரதியஜனதா முன்னாள்  எம்.பியுமான ஹேமமாலினி தெலுங்கு டப்பிங் படம் மூலம் மீண்டும் தமிழக ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார்.

இந்தித் திரைப்பட உலகில் இருபது வருடத்திற்கு மேல் “கனவுக் கன்னியாக” ரசிகர்களை வியக்க வைத்தவர், ஹேமமாலினி.

தமிழ்நாட்டில் பிறந்து, மும்பைக்கு இடம் பெயர்ந்து, இந்தித் திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டிய அவர், பரதநாட்டிய கலையிலும் சிறந்து விளங்கினார். பாரதியஜனதா சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்தவர்.

1963-ல் “இது சத்தியம்” என்ற திரைப்படத்தில் ஹேமமாலினியின் நடனம் இடம்பெற்றது. இதுவே அவரது முதல்படம். அதைத்தொடர்ந்து கநாதாயாகியாக வலம் வந்தார். அவரது படங்கள் தமிழில் வெற்றி பெறாததால், இந்தியிலேயே கவனம் செலுத்த தொடங்கினார்.

இந்தியில் ரிஷிகபூருடன் சப்னேகா செளதாகர்  படத்தில் நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட்டாகவே இந்தியில் பிரபல நடிகையாகி, ரிசிகர்களின் கனவுகன்னியாக வலம் வந்தார்.

சுமார் 20 ஆண்டுகள் பாலிவுட்டை கலக்கி வந்த ஹேமமாலினி 2003-க்குப்பிறகு பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியல்வாதியாக மாறினார்.

தமிழில், கடைசியாக கமல் நடிப்பில் வெளியான ஹேராம் படத்தில் நடித்தார். இந்த நிலையில், பல வருடங்களுக்குப்பிறகு தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த அவரது 100வது படமான கவுதமி புத்ர சத்தகர்ணி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார் ஹேமமாலினி.

இந்த படம் தற்போது அதே பெயரில் தமிழில் டப்பாகிறது.

ஆக, நீண்ட இடைவேளைக்குப்பிறகு மீண்டும் தெலுங்கு டப்பிங் படம் மூலம் தமிழ் ரசிகர்களை சந்திக்க வருகிறார் ஹேமமாலினி.