விசாகப்பட்டினம்

ந்திராவின் தலைநகராக அமராவதியில் இருந்து விசாகபட்டினம் மாற்றும் முடிவுக்கு அமராவதி பகுதி விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது ஐதராபாத் நகரம் தெலுங்கானா மாநிலத் தலைநகராக அறிவிக்கப்பட்டது.   ஆந்திர மாநிலத்துக்குத் தற்காலிக தலைநகராக ஐதராபாத் அறிவிக்கப்பட்டது.   ஆந்திர மாநிலத்தின் அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதி நகரம் ஆந்திராவின் தலைநகராகும் என அறிவித்தார்.    அதையொட்டி நகர கட்டமைப்பு திட்டம் தொடங்கியது.

இந்த கட்டமைப்புக்காக அமராவதி பகுதியில் உள்ள பல விவசாய நிலங்கள் கையகப்படுத்தப் பட்டன.  முதலில் இங்குள்ள விவசாயிகள் நிலங்களை அளிக்க மறுத்தனர்.   ஆகவே காவல்துறையினர் மிரட்டல், ஆசை காட்டுதல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் பல விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.   அத்துடன் நிலங்களை அளித்தோருக்கு இழப்பீட்டுத் தொகை மட்டுமின்றி பல சலுகைகள் அளிக்க உள்ளதாகவும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை ஒய் எஸ் ஆர் காங்கிரஸிடம் பறி கொடுத்தது.   புதிய முதல்வராக அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றார்.  சமீபத்தில் அமராவதிக்குப் பதில் விசாகப்பட்டினம் நகரம் ஆந்திராவின் தலைநகராக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் திரும்ப அளிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியது.   இந்த  அரசின் தலைநகரம் இடமாற்றத்தினால் ஆந்திர தலைநகரப் பகுதி மேம்பாட்டுக் கழகம் கலைக்கப்பட உள்ளது.  அறிவிப்பினால் நிலத்தை அளித்த அமராவதி விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.  விளை நிலங்களை தலைநகரக் கட்டுமானப் பணிக்கு அளித்த விவசாயிகளுக்கான இழப்பீடு மற்றும் சலுகைகளுக்காக வாரியம் ஒரு ஒப்பந்தம் இட்டுள்ளது.   இந்த வாரியம் கலைக்கப்பட்டால் அந்த ஒப்பந்தமும் ரத்தாகும்.

இது குறித்து விவசாயிகள், “எங்களிடம் ஒப்பந்தம் செய்தது தெலுங்கு தேசமோ ஒய் எஸ் ஆர் காங்கிரஸோ கிடையாது.   ஆந்திர அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.  எனவே எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் அமராவதியை தலைநகராக மாற்றும் முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்பதை விளக்க வேண்டும்.  முந்தைய அரசு எடுத்த ஒவ்வொரு முடிவையும் ஜெகன்மோகன் ரெட்டி மாற்றி வருகிறார்.  அதனால் எங்களைப் போல் பலர் துயருற்று வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளனர்.