சண்டிகர்: தங்களின் பயண வரலாறு குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கத் தவறியவர்களின் கடவுச்சீட்டுகளை(பாஸ்போர்ட்) பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்.

கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வெளிநாடு சென்று திரும்பியவர்கள் தங்களை பரிசோதனை மேற்கொள்ளுமாறும், தனிமைப்படுத்தலை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆனாலும், சிலர் தங்களின் பயண வரலாற்றை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் அமைதி காப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் கொரோனா தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் பேசியதாவது, “காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தங்களின் பயண வரலாறு குறித்த தகவல்களை மறைப்பவர்கள் யாராக இருந்தாலும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதில் எந்தவிதமான சமரசமும் இருக்க முடியாது. கடவுச்சீட்டுகளைப் பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க நேரிடும்” என்று எச்சரித்தார் அவர்.