னந்த்நாக்

மர்நாத் யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட நிகழ்வை நேரில் கண்டவர்கள் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளனர்.

பாக்யமணி தாகூர் (வயது 50) மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்.  இவர் தாக்குதலில் காயங்களுடன் உயிர் தப்பியவர்.  இவர், “ஐந்து தீவிரவாதிகளை நான் பார்த்தேன்.  அது தவிர மோட்டார் சைக்கிளில் இருவரைப் பார்த்தேன்.  அவர்கள் போலீஸ் சீருடை அணிந்திருந்தனர்.  திடீரென சுடத் துவங்கியதும்,  நாங்கள் போலிஸ் எங்களை எதற்கு சுடவேண்டும் என பயந்தோம்.  ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தும் நான் உயிர் பிழைத்தது அதிசயமே.  அந்த தாக்குதல் சில நொடிகள் நடந்ததா, அல்லது சில நிமிடங்களா என்பது எதுவும் எனக்குப் புலப்படவில்லை.  வாகனத்தில் என்னுடன் இருந்த என் அண்ணி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன்.  அனைவரும் செய்வதறியாது, ஓம் நமச்சிவாய என கூக்குரல் இட்டோம்.  ஓட்டுனர் திடீரேன வேகத்தை அதிகரித்து அங்கிருந்து எங்களைக் காப்பாற்றினார்” என்று கூறினார்.

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் படேல் (வயது 57) என்பவரும் ஓட்டுனர் சலீம் ஷேக் தான் தங்களின் உயிரைக் காப்பாற்றினார் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.  அவர், “தீவிரவாதிகள் எங்களின் பஸ் உள்ளே புக முயன்றனர்.  ஆனால் கிளீனர் அவர்களை வெளியே தள்ளி கதவை அடைத்து விட்டார்.   வேகமாக பஸ்ஸை ஒரு 15 நிமிடம் ஓட்டிச் சென்றார்.  எதிரில் சில ராணுவ வாகனங்கள் வருவதைக் கண்டு ஷேக் பஸ்ஸை நிறுத்தினார்.  துப்பாக்கி சூடு சத்தத்தை கேட்டு வந்தவர்கள் அவர்கள்.   அருகிலிருந்த ராணுவ முகாமுக்கு எங்களை அழைத்துச் சென்றனர்.   அதிர்ச்சியில் எங்களால் நகரக் கூட முடியவில்லை.  ராணுவத்தினர் ஒருவர் பின் ஒருவராக எங்களை இறக்கி பஸ்ஸை விட்டு வெளியே அழைத்து சென்றனர்” என தெரிவித்தார்.

ரமேஷ் மேலும் கூறுகையில், “குஜராத்தில் இருந்து 54 பயணிகளுடன் கிளம்பிய எங்கள் பஸ் காத்ரா செல்லும் வழியில் 5.15 மணிக்கு, டயர் பஞ்சரானதால் மெக்கானிக் ஷெட் செல்ல இருந்தோம்.  திடீரென ஏதோ பட்டாசு வெடிப்பது போல சத்தம் வரவே நாங்கள் திகைத்துப் போனோம்,  என்ன நடக்கிறது என புரிவதற்குள் பலர் காயமுற்றனர்.  ஓட்டுனர் விரைவாக பஸ்ஸை ஓட்டி எங்களை காப்பாற்றினார்” என்றார்.

ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புஷ்பா கோஸ்வாமி இந்த பயணத்தை நடத்துபவர்.  அவரும், ”எங்கள் ஓட்டுனர் ஷேக் தான் எங்களைக் காப்பாற்றினார். இல்லையெனில் அனைவரும் மரணம் அடைந்திருப்போம்.  எனக்கு வலது பக்கம் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது.  ஆனால் எனக்கு இந்த பதட்டத்தில் வலியே தெரியவில்லை.  அனைவருக்கும் மிலிட்டரி கேம்ப்பில் சிகிச்சை அளிக்கும் போது, எனக்கு ரத்தம் கொட்டுவதை பார்த்து அதிர்ந்த டாக்டர் சிகிச்சை செய்தார்.   நான் அடுத்த வருடம் அவசியம் பயணம் செய்து என்னைக் காப்பாற்றிய கடவுளுக்கு என் வேண்டுதல்களை நிறைவேற்றுவேன்” என்றார்.