அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்: நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு!

ஸ்ரீநகர்:

மர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.  ஜம்மு காஷ்மீர் பால்டால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நிலசரிவில் சிக்கிய 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலில் உருவாகும் பனி லிங்கத்தை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் பயனம் செய்து வருகின்றனர். ஜூலை ஆகஸ்டு மாதங்கிளில் இந்த யாத்திரை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டு அமர்நாத்  புனித யாத்திரை கடந்த மாதம் (ஜூன்)  27-ம் தேதி பகல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களில் இருந்து  தொடங்கியது. இடையிடையே பலத்த மழை காரணமாக யாத்திரை தடைபட்ட நிலையிலும் தொடர்ந்து பனி லிங்கத்தை யாத்ரீகர்கள் தரிசித்து வந்தவண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு காஷ்மீர் மாநிலம் பால்டால் பகுதியில் பெய்த கன மழை காரண மாக நிலச்சரிவு  ஏற்பட்டது.  பிராரிமார்க் என்ற இடத்தில்  ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு குழுவினர் சிக்கினர்.

இதுகுறித்து  தகவலறிந்து அங்கு வந்த மீட்புப்படையினர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.  நிலச்சரிவை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக அமர்நாத் யாத்திரை  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.