டில்லி:

டில்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘காஷ்மீரில் அமர்நாத் யாத்ரிகர்கள் மீத பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதல்.

அமர்நாத் பக்தர்கள் உயிரிழப்பை அறிந்து வேதனையுற்றேன். இந்த தாக்குதலை அனைத்து தரப்பு காஷ்மீர் மக்களும் கண்டித்திருப்பதற்கு தலை வணங்குகிறேன். மாநிலத்தின் காஷ்மீரிய உணர்வு உயிருடன் இருப்பதை கண்டு பெருமையாக உள்ளது’’ என்றார்.

காஷ்மீர் மாநிலம் அனந்தனாக் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதலில் 6 பெண்கள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து உயர்மட்ட பாதுகாப்பு கூட்டத்தை ராஜ்நாத் சிங் கூட்டி, காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அமர்நாத் யாத்ரீகர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க அவர் உத்தரவிட்டார்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்,‘‘நேற்று இரவு 8.20 மணியளவில் காஷ்மீரில் போலீஸ் வாகனத்தை குறித்து வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். போலீசாரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இதை எதிர்பார்க்காத பயங்கரவாதிகம் குறி இல்லாமல் கண் மூடித்தனமாக சுட்டனர்.

அப்போது நெடுங்ஞசாலையில் அமர்நாத்தில் தரிசனம் முடித்து திரும்பிய யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். தற்போது காஷ்மீரில் இன்டர்நெட் வசதி துண்டிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.