அமரரான அமர்சிங் – ஒரு சிறிய நினைவோட்டம்!

வடஇந்திய அரசியலில் பிரபல முகமாக இருந்த அமர்சிங், இன்று தனது 64வது வயதில், உடல்நலக் கோளாறு காரணமாக மரணமடைந்துள்ளார்.

பெயரளவில் சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இவர் இருந்துவந்தாலும், தற்போது ஒரு அரசியல் முக்கியத்துவம் அற்றவராகவே இறந்து போயுள்ளார்.

கடந்த 1990களின் பிற்பாதியில், இந்திய அரசியலில் இவர் மிகவும் பிரபலம். அப்போதைய கூட்டணி அரசியல் யுகத்தில், இவர் மிகுந்த பரபரப்பான நபராக அறியப்பட்டார். முலாயம்சிங் யாதவின் வலதுகரம் & இடதுகரம் ஆகிய அனைத்தும் இவர்தான்!

அந்த சமயத்தில்தான், இவர் கிட்டத்தட்ட இந்தியா முழுவதற்கும்(அரசியல் செய்திகளைப் படிப்பவர்கள் மற்றும் கேட்பவர்கள் மத்தியில்) அறியப்பட்ட நபராக மாறினார் எனலாம்.

அரசியல் புரோக்கர் என்றும் சிலரால் விமர்சிக்கப்பட்டார்! மேலும், இவர்மீது சில முறைகேட்டு புகார்களும் எழுந்ததோடு, வேறுசில சர்ச்சைகளிலும் அடிபட்டார். அரசியலில் லஞ்சப் புகார் காரணமாக சிறைக்கும் சென்று வந்துள்ளார்.

கடந்த 1999ம் ஆண்டு வாஜ்பாய் அரசு, நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 1 ஓட்டில் கவிழ்ந்து, காங்கிரஸ் தலைமையில் அரசமைக்க சோனியா காந்தி முயன்றபோது, அம்முயற்சியை அமர்சிங் கெடுத்துவிட்டதாக கூறப்பட்டதுண்டு. இதன்மூலம், சோனியா காந்தி மிகவும் வெறுக்கும் நபராக அந்த சமயத்தில் மாறிப்போனார் அமர்சிங்!

முந்தைய ஆண்டுகளில், ரிலையன்ஸ் நிறுவன அனில் அம்பானி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராயுடன், பொது நிகழ்வுகளில் அடிக்கடி தென்பட்டார் அமர்சிங். இவரின் முயற்சியால்தான், சமாஜ்வாடி கட்சியின் ஆதரவுடன், உத்திரப்பிரதேசத்திலிருந்து அனில் அம்பானி, கடந்த 2004ம் ஆண்டு, சமாஜ்வாடி கட்சியின் ஆதரவுடன், சுயேட்சையாக ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், இந்த நிகழ்வு, அம்பானிகளின் குடும்பத்தில் பெரிய சர்ச்சையை உண்டாக்கியதுடன், சகோதரர்கள்(முகேஷ் & அனில்) வணிகரீதியாக பிரியவும் காரணமானதாக கூறப்படுவதுண்டு!

நடிகை ஜெயப்பிரதாவை சமாஜ்வாடி கட்சியில் சேர்த்து, அவர் அக்கட்சியின் சார்பாக, உத்திரப்பிரதேசத்திலிருந்து மக்களவைத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவரும் இந்த அமர்சிங்தான்..!

ஒரு தலைமுறைக்கு நெருக்கமான நபர், அதற்கடுத்த தலைமுறைக்கு ஒவ்வாமல் போய்விடுவார் என்ற பொது உதாரணத்திற்கு ஏற்றபடி, சமாஜ்வாடி கட்சியில் அகிலேஷ் யாதவ் தலையெடுக்கத் தொடங்கியவுடன், அமர்சிங்கிற்கு சரிவு ஆரம்பமானது.

இதன் உச்சமாக, கடந்த 2010ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் அமர்சிங். அதன்பிறகு, தனிக்கட்சி கண்டு போனியாகாத நிலையில், அம்மாநிலத்தில், அஜித்சிங்குடன் இணைந்தார். ஆனால் அதுவும் எதிர்பார்த்ததைப்போல் ஒர்க்அவுட் ஆகவில்லை.

எனவே, பழைய பாசம் மீண்டும் துளிர்த்தது. அகிலேஷ் யாதவின் எதிர்ப்பையும் மீறி, சமாஜ்வாடி கட்சியின் கதவு அமர்சிங்கிற்கு மீண்டும் திறக்கப்பட்டதுடன், அவர் கடந்த 2016ம் ஆண்டு மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக்கப்பட்டார். மேலும், கட்சியின் பல பொதுச் செயலாளர்களில் ஒருவராகவும் அறிவிக்கப்பட்டார். ஆனாலும், ஒதுக்கப்பட்ட நபராகவே கட்சியில் நீடித்தார்!

தற்போது, சிங்கப்பூர் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். அரசியலில், சில திடீர் பிரபலங்கள் தோன்றி, குறிப்பிட்ட காலத்திற்கு கோலோச்சுவது இந்திய ஜனநாயகத்தில் பெரிய அதிசயமெல்லாம் இல்லைதான்! அந்த அந்தஸ்தை அமர்சிங்கும் அடைந்தார்!

அவரின் மரணத்திற்கு நமது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்..!

 

– மதுரை மாயாண்டி

கார்ட்டூன் கேலரி