அமேசான் நிறுவனத்தில் இதுவரை 20ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு….

பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் நிறுவனத்தில், 20ஆயிரம்  ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.  ஆனால், தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 30ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றால் உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து, ஆன்லைன் மூலமே பொருட்களை வாங்கி வருகின்றனர். பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசானில் அனைத்துவிதமான பொருட்களும் கிடைக்கின்றன. இந்நிறுவனத்துக்கு அமெரிக்கா உள்பட  உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. கொரோனா முடக்கத்தால் உலகம் முழுவதும்  இ-காமர்ஸ் நிறுவனங்களையே மக்கள் பெரிதும் சார்ந்திருக்கின்றனர்.  அதனால், அதன் வளர்ச்சியும் அதிகரித்துள்ளது.

கொரோனா பீதி காரணமாக  மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கியுள்ள மக்கள் ஆன்லைன் மூலமே தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்து வருகின்றனர். இதனால், வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 1 லட்சம் ஊழியர்களை புதியதாக அமேசான் நிறுவனம் வேலைக்கு எடுத்தது.

இந்நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை அமேசான் முன்களப் பணியாளர்கள், உணவு சந்தை பணியாளர்கள் என 19,816 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  பொதுமக்களுடன் ஒப்பிடுகையில் இது 42% குறைவான பாதிப்பு என அந்நிறுவனம்  கூறி உள்ளது.

ஆனால், இதுகுறித்து ஆய்வு செய்த ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்,  தங்களிடம் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில், நிறுவன ஊழியர்களுடன், பொதுமக்களை ஒப்பிட்டால் 33,952 பேர் பாதிப்புக்குள்ளாகியிருக்க வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.