ஐதராபாத்: உலகிலேயே தனது பெரிய வளாகத்தை அமேசான் இ-காமர்ஸ் நிறுவனம் ஐதராபாத்தில் திறந்துள்ளது. கடந்தாண்டுதான் ஸ்வீடன் நாட்டின் ஐகேஇஏ தனது முதல் ஸ்டோரை இதே ஐதராபாத் நகரில் திறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனையடுத்து, இந்நகருக்கு குறுகிய காலத்திலேயே இரண்டாவது கவுரவம் கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். அமேசான் நிறுவனத்தினுடைய அலுவலகங்களிலேயே உலகளவில் மிகப்பெரிய அலுவலகம் இதுதான் என்று கூறப்படுகிறது.

மொத்தம் 3 மில்லியன் சதுர அடியில், 1.8 மில்லியன் சதுர அடிக்கு கட்டப்பட்டுள்ளது அமேசான் அலுவலகம். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, உலகில் கட்டப்பட்ட அமேசானின் சொந்த அலுவலகம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத்தின் ஐடி பூங்கா பகுதியான நனக்ரம்குடாவில் மொத்தம் 9.5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது இந்த வளாகம். இந்த வளாகத்தில் மொத்தம் 15000 ஊழியர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானத்திற்கான அடிக்கல் கடந்த 2016ம் ஆண்டு நடப்பட்டது. எனவே, இவ்வளவு பெரிய வளாகம் வெறும் 3 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டதும் ஒரு சாதனைதான் என்று குறிப்பிடப்படுகிறது.

கட்டுமானப் பணிக்காக ஒவ்வொரு நாளிலும் சுமார் 2000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு சர்வதேச தரம் வாய்ந்த பணிசெய்யும் சூழலை உருவாக்க, மொத்தம் 18 மில்லியன் மனித-நேரங்கள் செலவிடப்பட்டுள்ளன.

இந்த வளாகத்தில், 290 மாநாட்டு அறைகளும், 49 எலவேட்டர்களும், ஒரு ஹெலிபேடும் உண்டு. மேலும், பொழுதுபோக்கிற்காக ஒரு தனியான தளமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தில் மட்டும், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள ஈஃபிள் கோபுரத்தில் இடம்பெற்றுள்ள ஸ்டீலைக் காட்டிலும் 2.5 மடங்கு அதிக ஸ்டீல் இடம்பெற்றுள்ளதாம்.