அடுத்தப் போட்டியில் அம்பதி ராயுடு, பிராவோ ஆடுவார்கள்: சென்னை அணி நிர்வாகம்

துபாய்: டுவைன் பிராவோ மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர், சென்னை அணி பங்கேற்கவுள்ள அடுத்தப் போட்டிக்கு தயாராகி விடுவர் என்று அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மும்பை எதிர்த்து ஆடிய முதல் போட்டியில், சென்னை அணியில் பங்கேற்று, சிறப்பாக விளையாடினார் அம்பதி ராயுடு. ஆனால், அப்போட்டியில் அவருக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்து. இதனால், அடுத்த 2 போட்டிகளில் பங்கேற்கவில்லை.

ஆனால், காயம் காரணமாக பிராவோ எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. கேப்டன் தோனியோ, முடிவுகள் எடுப்பதிலும், விளையாடுவதிலும் தொடர்ந்து சொதப்பி வருகிறார். சென்ன‍ை அணி தனது 2வது மற்றும் 3வது போட்டிகளில் மோசமாக தோற்றது.

இந்நிலையில், அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், “ராயுடு காயத்திலிருந்து வேகமாக மீள்கிறார். பயிற்சியில் நன்றாக ஈடுபடுகிறார். எனவே, அடுத்தப் போட்டியில் பங்கேற்பார். பிராவோவும் வலைப் பயிற்சியில் பிரச்சினையின்றி செயல்படுவதால், அவரும் அடுத்தப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு அதிகம்.

எனவே, தோல்விகளிலிருந்து நாங்கள் மீண்டு வந்து வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்” என்றார் விஸ்வநாதன்.