ஐதராபாத்: இரண்டு மாதங்களுக்கு முன்னதாக கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்திருந்த அம்பதி ராயுடு, தற்போது தான் மீண்டும் விளையாட தயாராய் இருப்பதாக அறிவித்துள்ளார்.

33 வயதான அம்பதி ராயுடு, உலகக்கோப்பை போட்டியில் தான் புறக்கணிக்கப்பட்டதன் கோபத்தின் எதிரொலியாக கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வுபெறுவதாக அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆனால், தற்போது திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார் அவர். ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு எழுதியளுள் கடிதத்தில், தனது முடிவு உணர்ச்சி வயப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதாகவும், தான் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாட தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனது கடினமான காலங்களில் மிகவும் ஆதரவாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், விவிஎஸ் லட்சுமண் மற்றும் நோயல் டேவிட் ஆகியோருக்கு இத்தருணத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குள் விளையாட வேண்டிய கிரிக்கெட் இன்னும் நிறையப் பொதிந்துள்ளது என்பதை அவர்கள் உணர வைத்தார்கள்.

சிறப்பான சீசனை அடுத்து எதிர்நோக்கியுள்ளேன். ஐதராபாத் அணியில் பங்குபெற்று முழுத் திறனையும் வெளிப்படுத்த தயாராக உள்ளேன் மற்றும் அந்த அணியின் வெற்றிக்கு முக்கியத்துவம் வாய்ந்த முறையில் பங்களிக்கவுள்ளேன்.