அம்பத்தி ராயுடு : சென்னை அணியின் வரம்

--

சென்னை

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இறுதிச் சுற்று வரை செல்லும் வெற்றி வாய்ப்பை தேடித் தந்த வீரர்களில் அம்பத்தி ராயுடு முக்கியமானவர் ஆவார்.     இரண்டாண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சென்னை அணி தற்போது இந்த அளவுக்கு வெற்றி வாகை சூடும் என்பது பலரும் எதிர்பார்த்த ஒன்றுதான்.   இதற்கு அம்பத்தி ராயுடுவை அணியில் இணைத்ததும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.

இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு ஆட்டத்திலும் ராயுடு தனது தனித்தன்மையை நிரூபித்துள்ளார்.   முன்பு தனது கோபத்தினால் சில சர்ச்சைகளில் சிக்கிய அவர் தற்போது தனது விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.    ஐதராபாத்தில் சன்ரைசர்ஸ் அணியுடன் நடந்த லீக் ஆட்டத்தில் ராயுடு 37 பந்துகளில் 79 ரன்கள் அடித்ததினால் அன்றைய சென்னை அணி வெற்றி வாகை சூட முடிந்தது.

இன்று நடைபெற உள்ள இறுதிச்சுற்று ஆட்டத்துக்காக அவர் தற்போது கடும் பயிற்சியில் ஈடு பட்டுள்ளார்.   இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி அடைந்தால் அதில் அம்பத்தி ராயுடுவுக்கு பெரும் பங்கு இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.