திருவனந்தபுரம்

பிறந்து ஒரு மாதமே ஆன ஒரு குழந்தையின் உயிரைக் காக்க 516 கிமீ தூரத்தை 7 மணி நேரத்தில் கடந்து ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சாதனை புரிந்துள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூரில் பிறந்து ஒரு மாதம் ஆன குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   அந்தக் குழந்தைக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய திருவனந்தபுரம் எடுத்துச் செல்ல வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  உடனடியாக அந்தக் குழந்தையும்,  உறவினர்களும் ஆம்புலன்சில் பயணம் மேற்கண்டனர்.  விரைவாக செல்ல வேண்டும் என ஓட்டுனரிடம் குழந்தையின் தாய் கெஞ்சி உள்ளார்.

அதனால் ஓட்டுனர் தமீம் தன்னால் முடிந்த அளவு வேகமாக சென்றுள்ளார்.  குழந்தையின் உயிரைக் காக்க அபரிமிதமான வேகத்தில்ச் என்று 516 கிமீ தூரத்தை 7 மணி நேரத்தில் கடந்து சென்றுள்ளார்.  சாதாரணமாக இந்த தூரத்தை கடக்க சுமார் 14 மணி நேரம் ஆகும்.   ஆனால் அதில் பாதி நேரத்தில் கடந்து குழந்தையின் உயிரை ஓட்டுனர் தமீம் காப்பாற்றி உள்ளார்.

விசாரித்ததில் வழியில் ஒரு 15 நிமிடம் ஓட்டுனர் ஓய்வு எடுத்துக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.  அதை சேர்க்காவிட்டால் 6மணி 45 நிமிடத்தில் இந்த தூரத்தை கடந்துள்ளார்.  அதாவது சராசரி வேகம் மணிக்கு 76.4 கிமீ ஆகிறது,  ஓட்டுனர் தமீமுக்கு இந்த செய்தி வெளிவந்ததில் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன.