கொரோனா பெயரில் கொள்ளையோ கொள்ளை……

இந்த ஊரடங்கு காலத்தில் ஆம்புலன்ஸ் சேவையின் தேவை மிக மிக அதிகமாகிவிட்ட சூழலில் இதனையும் தங்களுக்குச் சாதகமாக்கி அதிக வருமானம் பார்க்க நினைப்போரும் இருப்பது தான் வேதனையான விசயம்.

32 வயதான மும்பையைச் சேர்ந்த ஒருவர் வெறும் நான்கு கிலோமீட்டர் பயணிக்க ரூ. 8,000/- கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், எல்லா இடத்திலும் இதே நிலை தான் என்கின்றனர் பொதுமக்கள் அனைவருமே.

“யாரைக் கேட்டாலும் எனக்கு கொரோனா இருக்குங்கிற காரணத்தைச் சொல்லி வர முடியாதுனு சொல்லிட்டாங்க.  ரொம்ப நேரமா வெயிட் பண்ணி வெறுத்துப் போய் வேற வழியில்லாம தான் 8000 ரூபாய் குடுத்து போனேன்” என்று வருத்தப்படுகிறார் அந்த நபர்.

ஒரு பிரபல மருத்துவமனையின் தலைமை மருத்துவர், “இங்க ஒரு குடும்பம், பேஷண்ட் ஒருத்தரை ஆக்ஸிஜன் சப்போர்ட்டோட ஒரு ஹாஸ்ப்பிடல்லருந்து இன்னொரு ஹாஸ்ப்பிடல் ஷிப்ட் பண்ண ரூ. 25,000/- குடுத்தாங்க… தெரியுமா..?” என்று கூறி அதிர்ச்சியளிக்கிறார்.

“இங்க போதிய ஆம்புலன்ஸ் இல்லாதனால கொரோனா பாதிப்பிலிருந்தாலும், சாதாரண பேஷண்ட்டாவே இருந்தாலும் ஒரே மாதிரி கஷ்டம் தான்.  அதிக கட்டணம் தவிர்க்கவே முடியாதது தான். அதிலும் சிலபேர் கொரோனா பேஷண்ட்னா ரூ. 20,000/- வரை கேக்குறாங்க.  அரசாங்கம் தலையிட்டு ஏதாவது பண்ணினால் தான் உண்டு ” என்று புலம்புகிறார் ராய்ஸ் ஷேக் எனும் சமாஜ்வாடி பார்ட்டி எம்எல்ஏ.

மூன்று நாட்கள் முன்பு பொவாய் பகுதியை சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பம், ஹீராநந்தினி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ஒருவரை அருகே இருக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி கடைசியில் ஒரு தனியார் சேவையைப் பயன்படுத்தி வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

ஆம்புலன்ஸ் என்பதே ஒரு அரிய சேவை என்று இருந்த நிலை மாறி, இந்த கொரோனாவால் இதுவும் இப்போது வெறும் பணம் தரும் வியாபாரம் என்று ஆகிவிட்டது பெரும் கொடுமை தான்.

– லெட்சுமி பிரியா