டில்லி

ம்புலன்ஸ் ஊழல் வழக்கில் அமலாக்கத் துறை கற்பனையாக ரூ.24 கோடி மோசடி எனக் கூறியதாகத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு இலவச சேவை செய்து வரும 108 ஆம்புலன்ஸ் சேவையை ராஜஸ்தான் மாநிலத்தில் ஜிகித்சா ஹெல்த் கேர் என்னும் நிறுவனம் செய்ய ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.   இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பதவியில் இருந்தார்.   அவருடன் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்  சச்சின் பைலட், முன்னாள் மத்திய காங்கிரஸ் அமைச்சர் வயலார் ரவியின் மகன் கிருஷ்ணா ஆகியோரும் இயக்குநராக இருந்தனர்.

இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நிகழ்ந்துள்ளதாகக் கடந்த 2015 ஆம் வருடம்  அப்போதைய ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.   இந்த வழக்கில் அசோக் கெலாத், சச்சின் பைலட், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.    முதலில் சிபிஐ பதிந்த குற்றப்பத்திரிகையில் அசோக் கெலாத், சச்சின் பைலட் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின்  பெயர் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அமலாக்கத்துறை தனியாக இது குறித்து நடத்திய விசாரணையின் அறிக்கை கடந்த 2018 ஆம் வருடம் ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.  அதில் இந்த நிறுவனம் சுமார் 23.92 கோடி ஊழல் செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.   ஜிகித்சா ஹெல்த் கேர் நிறுவனத்தின் ரு..11.88 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை கைப்பற்றியது.   இதில் பல  வங்கிகளின் உத்திரவாத பத்திரங்களும் அடங்கும்.

எனவே இந்த வங்கிகள் பண மோசடி தடுப்பு சட்ட தீர்ப்பாயத்தை அணுகின.   இந்த உத்திரவாதங்களை அமலாக்கப்பிரிவு திரும்ப அளித்தால் மட்டுமே வங்கிகளின் பணம் திரும்ப வரும் என அந்த மனுவில் வங்கிகள் மற்றும் ஜிகித்சா நிறுவனம் தெரிவித்திருந்தன.    இந்த மனுவை தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி மன்மோகன் சிங் விசாரணை செய்து வந்தார்.

அவர் தனது தீர்ப்பில், “அமலாக்கத்துறை இவ்வாறு வங்கி உத்திரவாத பத்திரங்களைக்  கைப்பற்றியது மூளையற்ற மற்றும் கொடுமையான நடவடிக்கை ஆகும்.   இந்த வழக்கில் இந்த வங்கிகளுக்கு எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் வங்கிகளை வழக்கில் இணைத்தது மிகவும் கண்டனத்துக்குரியது.   மேலும் சிபிஐ வழக்கின் படி ஜிகித்சா நிறுவனம் ரூ.62 லட்சம் மட்டுமே மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   எனவே அந்நிறுவனத்தின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களைக் கைப்பற்றியது மிகவும் தவறான செயல் ஆகும்.

அது மட்டுமின்றி அமலாக்கத்துறை தெரிவித்துள்ளபடி ரூ.23.92 கோடி அளவிலான  மோசடி நடந்ததற்குச் சரியான ஆதாரம் கிடையாது.  எனவே தீர்ப்பாயம் இதை ஒரு கற்பனையான தொகை எனவே கருதுகிறது.    சிபிஐ ரூ.62 லட்சம் மோசடி நடந்துள்ளதாகக் கூறும் நிலையில் அமலாக்கத்துறை எவ்வாறு ரூ.23.92 கோடி மோசடி நடந்ததாகத் தெரிவித்துள்ளது என்பது தெரியவில்லை. ” எனக் கூறப்பட்டுள்ளது.