டில்லி,

ஜாமின் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசுக்கு, மத்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

குற்றம் செய்பவர்கள் எளிதில் ஜாமின் பெறும் வகையில், சட்ட திருத்தம்  மேற்கொள்ள மத்திய அரசை, சட்ட கமிஷன் பரிந்துரைத்துள்ளது.

குற்றம் உறுதி செய்யப்பட்ட ஒருவர் தண்டனை பெற்ற ஒருவர் தண்டனைக் காலத்தில் மூன்றில் ஒரு பங்கை சிறை யில் கழித்திருந்தால் அவனை பிணையில் விடுக்கலாம் என சட்ட கமிஷன் அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.

இந்த பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்தினால் விசாரணை நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருக்கும் 2 லட்சத்து 38 ஆயிரம் சிறைக் கைதிகள் ஜாமினில் வெளிவர வழி ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல குற்றவாளிக்கு ஜாமின் கிடைத்தும் 30 நாட்களுக்குள் சூரிட்டி எனப்படும் உத்தரவாதம் அளிப்போர் கிடைக்காமல் விதிகளை தளர்த்த கோரி மனு செய்தால் நீதிமன்றமே துரிதமாக செயல்பட்டு உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட உள்ளது.

மேலும் ஜாமினில்  விண்ணப்பித்து ஒரு வாரத்திற்குள் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வகையில் உயர்நீதிமன்றங்கள் மற்றும் கீழமை  நீதிமன்றங்களுக்கு விதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏழை, எளிய குற்றவாளிகள் சிறைகளில் தண்டனையை அனுபவித்து வரும் நிலையில் பொருளாதார குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு கருணை அடிப்படையில் ஜாமின் அளிக்கக் கூடாது என்றும் பரிந்துரைக்க சட்ட கமிஷன் திட்டமிட்டுள்ளது.

இந்த பரிந்துரைகளை விரைவில் மத்திய சட்டஆணையம், சட்ட அமைச்சகத்தில் அளிக்க உள்ளது. அதைத் தொடர்ந்து இந்த சட்ட திருத்தங்கள் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.