மும்பை 26/11 தாக்குதல் குறித்து தகவல் அளித்தால் 50 லட்சம் டாலர் பரிசு : அமெரிக்கா

வாஷிங்டன்

மும்பையில் நடந்த 20/11 தாக்குதலின் முக்கிய புள்ளிகள் குறித்து தகவல் அளிப்போருக்கு 50 லட்சம் டாலர் பரிசளிப்பதாக  அமெரிக்கா  தெரிவித்துள்ளது

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி மும்பை நகருக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி தாக்குதலை நிகழ்த்தினர். பல இடங்களில் நிகழ்ந்த இந்த தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பல பலர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியவர்கள் கொல்லப்பட்டனர். பிடிபட்ட கசாப் தூக்கிடப்பட்டான். இந்த நிகழ்வு 26/11 தாக்குதல் என உலகெங்கும் அழைக்கபடுகிறது. இன்று அந்த நிகழ்வு நடந்து 10 வருடங்கள் ஆகின்றன.

இந்த பத்தாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமெரிக்க நாட்டின் மாநில செயலர் மைக்கேல் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்திய மக்களுக்கும் மற்றும் அங்குள்ள மும்பை நகர வாசிகளுக்கும் அமெரிக்க அரசு மற்றும் மக்கள் சார்பில் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மும்பை 26/11 தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் ஆகி உள்ளத். நாங்கள் இந்த தாக்குதலில் தங்கள் அன்பானவர்களை இழந்த மக்களுக்கு எங்கள் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். உலகத்தையே அதிர வைத்த இந்த தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்ளிட்ட பலர் பலியானார்கள்

இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் பாகிஸ்தானை வற்புறுத்துகிறோம். இந்த சம்பவம் நடந்து 10 வருடங்கள் ஆகியும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வருத்தத்துக்கு உரியது. நாங்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் மற்றும் ஐநா பாதுகாப்பு குழுவையும் இந்த தாக்குதலுக்கு காரணமான லஷ்கர் ஈ தொய்பாவின் பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.

இந்த கொடூர செயல்களை செய்தவர்கள் தண்டனை பெற வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. அத்துடன் இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு அமெரிக்கா 50 லட்சம் டாலர் பரிசை அறிவிக்கிறது. இந்த் தகவலின் மூலம் மும்பையில் தாக்குதலை நிகழ்த்த திட்டமிட்டவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.