அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 1.70 லட்சம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 1.70 லட்சத்தை தாண்டிவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறி உள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலக நாடுகளை கடுமையாக பாதித்து வருகிறது. உலகளவில் 13.6 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5,86,000 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். உலக அளவில் அமெரிக்காவில்தான் அதிக அளவு கொரோனா நோயாளிகள் உள்ளனர்.

அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந் நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 54 லட்சத்தைக் கடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பலியானோர் எண்ணிக்கை 1,70,019 ஆக அதிகரித்துள்ளது. அதில், அதிகபட்சமாக நியூயார்க்கில் 32,840 பேர் உயிரிழந்துள்ளனர். நியூ ஜெர்சியில் 15,912, கலிபோர்னியா மற்றும் டெக்சாஸ் மாகாணத்தில் தலா 10,000க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவது மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.