அமெரிக்கா: கலை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு! 22 பேர் காயம்!

நியூ ஜெர்சி நகரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் மர்ம நபர்கள் இரண்டு பேர் புகுந்து துப்பாகிச்சூடு நடத்தியதில் 22  பேர் காயமடைந்தனர். .

அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நேற்று கலை நிகழ்ச்சி ஒன்று நடந்தது.  இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது கூட்டத்தில் புகுந்த இரு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென  துப்பாக்கிகள் மூலம் மக்கள் கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தனர்.

நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு வழங்கிய காவல்துறையினர்  உடனடியாக சுதாரித்துக்கொண்டு மர்ம நபர்களை நோக்கி எதிர்த் தாக்குதல் நடத்தினர். அதில் துப்பாக்கிச்சுடு நடத்திய ஒருவர் காவல்துறையால் கொல்லப்பட்டார். மற்றொருவர் பிடிபட்டார்.

இந்தத் தாக்குதலில்  சிறுவர்கள் உள்பட 22 பேர் படுகாயமடைந்தனர்.  அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சம்பவம் நடந்த இடத்தில் மேலும் சில துப்பாக்கிகளைக் காவல் துறையினர் கைப்பற்றினர்.  துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் என்னவென்று  கண்டறியப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்க காவல்துறை தெரிவிக்கிறது.