அமெரிக்கா: ஹெச்-1பி விசா சலுகையை ரத்து செய்ய டிரம்ப் முடிவு

வாஷிங்டன்:

அமெரிக்காவில் ஹெச்-1பி விசா சலுகையை ரத்து செய்ய டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டினர் அமெரிக்காவுக்கு பணி நிமித்தமாக செல்வதற்கு ஹெச்-11பி விசாக்களை அந்நாடு வழங்குகிறது. இந்த விசா வைத்துள்ளவர்களின் வாழ்க்கை துணையும் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான நடைமுறையை எளிமைபடுத்தி, முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சியில், 2015-ம் ஆண்டு இச்சலுகை வழங்கப்பட்டது. அதன்படி, ஹெச்-4 சார்பு விசாவின் கீழ், ஹெச்-1பி விசாதாரர்களின் வாழ்க்கை துணைகளும் பணியாற்ற சில விதிமுறைகளுடன் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டில் சுமார் 41 ஆயிரம் ஹெச்-4 விசாதாரர்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு ஜூன் வரை சுமார் 36 ஆயிரம் ஹெச்-4 விசாதாரர்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், அமெரிக்கப் பணியாளர்களை பாதுகாக்கும் வகையில் ஹெச்-1பி விசா வழங்குதலில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் இச்சலுகையை ரத்து செய்வது குறித்தும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.