அமெரிக்கா: ஐஎஸ் அமைப்புக்கு பிட்காயின் மூலம் நிதியுதவி அளித்த இளம்பெண் கைது

நியூயார்க்:

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு பிட்காயின் மூலம் நிதியுதவி அளித்த இளம்பெண் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


பாகிஸ்தானில் பிறந்தவர் ஷாநஸ் (வயது 27). அமெரிக்காவில் ஆய்வக தொழில்நுட்ப பணியாளராக வேலை செய்து வந்தார். இணையத்தில் பிட்காயின் வாங்குவதற்காக மோசடி செய்து 85 ஆயிரம் டாலரை கடனாக பெற்றுள்ளார். பிட்காயின் என்பது இணைய பணமாகும். இது சட்ட பூர்வமானது அல்ல. ஆனாலும், இந்த ஆண்டு இதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.

ஷாநஸ் கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட் பெற்றுள்ளார். பிறகு இஸ்தான்புல்லில் நின்று செல்லும் பாகிஸ்தான் விமான டிக்கெட்க்கு பதிவு செய்துள்ளார். சிரியா செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.

முன் அனுமதியின்றி ஒரு நபர் அமெரிக்காவில் இருந்து சட்டப்பூர்வமாக 10 ஆயிரம் டாலரை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். இந்நிலையில் அவர் 9 ஆயிரத்து 500 டாலரை எடுத்துச் சென்ற போது ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ஐ.எஸ் பயங்ரவாத அமைப்பின் தகவல்களை இவர் பல முறை மின்னணு சாதனங்கள் மூலம் இணையதளத்தில் தேடியிருந்தது சோதனை மூலம் தெரியவந்தது. சிரியா அகதிகளுக்கு நிதியுதவி அளிப்பதற்காக வெளிநாடுகளுக்கு ஷாநஸ் பணம் அனுப்பினார் என்று அவரது வக்கீல்கள் தெரிவித்தனர்.