பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் மீது விசாரணை தேவை : அமெரிக்க நீதிமன்றம்

--

நியூயார்க்

நிரவ் மோடி ஊழல் குறித்த வழக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் கூறி உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13400 கோடி முறைகேடு செய்து விட்டு நிரவ் மோடி தனது குடும்பத்துடனும் கூட்டாளி மெகுல் சோக்சியுடனும் நாட்டை விட்டு சென்று விட்டார்.  அவர் வங்கிக்கு அளிக்க வேண்டிய பாக்கிக்காக அவரது தொழில் நிறுவனங்களை விற்றுஈடு செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முயற்சிகள் எடுத்து வருகின்றன.

அவற்றில் ஒன்றாக அமெரிக்காவில் உள்ள அவருடைய மூன்று நிறுவனங்களை திவாலாகி விட்டதாக அறிவிக்கக் கோரி அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க மாநில நீதிமன்றம்  இந்த வங்கிகள் முறைகேடு விவகாரத்தில் வங்கி ஊழியர்களுக்கும் சம்மந்தம் இருக்கலாம் என கருதி உள்ளது.

அதை ஒட்டி இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த விசாரணையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஊழியர்களும் இணைக்கப்பட்டு அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   மேலும் இந்த விசாரணைக்கான விதிமுறைகளையும் அளித்துள்ளது.