வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடோ மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோவில் இரவு விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது.
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில் ‘பல்ஸ்’ என்ற பெயரில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்பட்டு வந்தது. அந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான ஓரினச்சேர்க்கையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு வாலிபர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கு வந்திருந்தவர்கள் உயிர் பிழைப்பதற்காக அலறியவாறு சிதறி ஓடினர். ஆனாலும் பலர், குண்டுபாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
download
தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், ஆர்லண்டோ காவல்துறை வட்டாரங்கள் முதலில் தெரிவித்தன.
அதே நேரம் இந்த தாக்குதலில் பயங்கரவாத குழுக்களின் கைவரிசை இருக்கலாம் என்றும் குறிப்பிட்டு எந்த இயக்கத்தையும் சொல்ல முடியவில்லை என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது.
“ஆப்கன் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான உமர் மேதீன் என்பவர்தான் கொலையாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஓரின சேர்க்கைக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பரப்பி வரும் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டவராக இவர் இருக்க கூடும் என தெரிகிறது. மற்றபடி கொலையாளி, நேரடியாக ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புள்ளவரா என்பது முழு விசாரணைக்குப் பிறகே தெரிய வரும்” என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.