வாஷிங்டன்

மெரிக்காவில் நிதி இல்லாததால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன

அமெரிக்காவுக்கு  சிறுவயதில் உரிய ஆவணங்கள் இன்றி பெற்றோரால் அழைத்து வரப்பட்டு குடியேறிய அயல் நாட்டவர்கள் சுமார் 7 லட்சம் பேருக்கு மேல் உள்ளனர்.   அவர்கள் “டிரீமர்ஸ்” என அழைக்கப் படுகின்றனர்.     முந்தைய அதிபர் ஒபாமா ஆட்சியில் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க திட்டமிடப்பட்டது.     தற்போதைய அதிபர் ட்ரம்ப் அந்த திட்டத்தை ரத்து செய்து விட்டார்.   இதனால் இந்தியர்கள் உட்பட பல நாட்டவர் நாடு கடத்தும் அபாயத்துக்கு உள்ளாகினர்

ட்ரம்பின் இந்த திட்டத்துக்கு அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி ஒப்புதல் அளிக்கவில்லை.   அமெரிக்க அரசுக்கு மாதாமாதம் செலவுக்கு நிதி அளிப்பதற்கான மசோதா கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற கீழ்ச் சபையில் நிறைவேறியது.   அதே நேரத்தில் மேல் சபையான செனட் சபையில் ஆதரவு கிடைக்க வில்லை.   மசோதா நிரவேற 60 ஓட்டுக்குமேல் தேவை என்னும் நிலையில் (2/3 பங்கு) ஆதரவாக 50 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்காததால் தோல்வி அடைந்துள்ளது.   இதனால் தற்போது அரசு அலுவலகங்களை நடத்த நிதி உதவி அளிக்க முடியவில்லை.   அதையொட்டி அமெரிக்காவில் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு விட்டன.    அரசு பணி புரியும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை, அஞ்சலகங்கள், விமான போக்குவரத்து கட்டுப்பாடு, மருத்துவ சேவைகள்,  இயற்கைப் பேரிடர் மேலாண்மை, சிறைத்துறை,  காவல்துறை போன்ற முக்கிய பணிகள் மட்டுமே நடைபெறும் எனவும் அங்கு பணிபுரிபவர்கள்  அரசுக்கு நிதி உதவி வரும் வரை ஊதியமின்றி பணி புரிய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினரும் அமெரிக்க அரசுப் பணியில் உள்ளதால் இந்நிகழ்வு உலகெங்கும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.