நியூயார்க்

போதை மருந்துகள் கலந்த இந்திய வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                                                                 மாதிரி புகைப்படம்

அமெரிக்காவில் அபின் போன்ற போதை மருந்துகள் கலந்த வலி நிவாரண மாத்திரைகள் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.    இது அமெரிக்க சட்டப்படி கடுமையான குற்றம் ஆகும்.  இந்த மாத்திரைகள் பலருக்குப் பயங்கரமான பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது.   ஒரு சில நேரங்களில் சுவாசம் தடைப் பட்டு மரணம் ஏற்படுகிறது.

இந்த வலி நிவாரண மாத்திரைகள் விற்பனையை உடனடியாக தடை செய்யும் முயற்சியில் மாநிலங்கள் ஈடுபட வேண்டும் என அமெரிக்க அரசு கூறி உள்ளது.  அத்துடன் இவ்வாறு  நடவடிக்கை எடுக்கும் மாநிலங்களுக்கு 200 கோடி டாலர் வெகுமதி அளிக்கப்படு எனவும் அரசு அறிவித்துள்ளது.   அமெரிக்காவில் உள்ள அத்தனை மாநிலங்களும் இந்த மருந்து விற்பனை செய்வோரைக் கண்டறிய கடும் முயற்சிகள் எடுத்து வருகின்றன.

அமெரிக்க காவல்துறையினர் இந்தியாவில் இருந்து ‘டிரமதால்’ எனப்படும் வலி நிவார மாத்திரைகளை இறக்குமதி செய்து வாடிக்கையாளர்களுக்குத் தபால் மூலம் விற்பனை செய்ததாக எழில் செழியன் கமல்தாஸ் (46), முகுல் சுக் (24), குலாப் குலாப்(45) தீபக் மன்சந்தா(43), பார்த்திபன் நாராயணசாமி(58) பல்ஜீத் சிங்(29), ஹர்ப்ரீத் சிங்(28) விகாஸ் எம் வர்மா(45) ஆகிய எட்டு பேரைக் கைது செய்துள்ளது.

இந்த மருந்தில் அபின் கலந்துள்ளதால் அமெரிக்கக் காவல் துறை இவர்கள் மீது கடுமையான பிரிவின் கீழ்  வழக்கு பதிந்துள்ளது.   இந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் எழில் செழியனுக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.   மேலும் அவருடைய கூட்டாளிகளான மற்ற 7 பேருக்கு ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.