திம்பு: இந்தியாவில் இருந்து பூடான் சென்ற அமெரிக்கருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவலை பூடான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் இருந்து வந்த 76 வயதான அமெரிக்க சுற்றுலா பயணிக்கு கொரோனா பாதிப்பு உள்ளது, மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்திருக்கிறது என்று சமூக வலைதளங்களில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.

தொலைக்காட்சியில் பேசிய அந்நாட்டு பிரதமர் லோட்டே ஷெரிங் இதை அறிவித்தார். இது நேரடியாக ஒளிபரப்பானது. கவுகாத்தியில் இருந்து ஒரே விமானத்தில் அமெரிக்கருடன் பயணம் செய்த 8 இந்திய பயணிகளும் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதே தகவலை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், அமெரிக்காவைச் சேர்ந்த 76 வயதானவர் பூட்டானுக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்திருந்தார். மார்ச் 2 ம் தேதி இந்தியாவின் கவுஹாத்தியில் இருந்து விமானத்தில் ஏறிய பின்னர் அவர் பரோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாட்டிற்குள் நுழைந்தார் என்று கூறி இருக்கிறார்.

ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இமயமலைக்கு 2 வாரங்களுக்கு  சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட அமெரிக்கர், தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளார்.

குறைந்தது 90 பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார். அவர்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் பிரதமர் அலுவலகம் இறங்கி இருக்கிறது.