மேரிலாண்ட், அமெரிக்கா

ராமர் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டது என அமெரிக்க தொலைக்காட்சி சேனல் ஒன்று தெரிவித்துள்ளது.

ராமேசுவரம் பகுதியில் உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார் வரை ராமர் பாலம் உள்ளதாக கூறப்படுகிறது.   கடலுக்கு அடியில் சுமார் 50 கிமீ தூரம் வரை உள்ள இந்த மணல் திட்டுக்கள் போல அமைந்துள்ள இந்தப் பாலம் ராமரால்  வானரங்களீன் உதவியுடன் கட்டப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.   ஆங்கிலேயர்களால் இது ஆதாம் பாலம் என அழைக்கப்படுகிறது.

சேது சமுத்திர கால்வாய் திட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.   இது தென் இந்தியர்கள் பலரின் கனவாக இருந்தது.   ஆனால் இந்த கால்வாய் ராமர் பாலத்தை அழிக்கும் என இந்துக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.   அதையொட்டி ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திர கால்வாய் அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதியப்பட்டது.   விசாரணையில் உள்ள இந்த வழக்கில் மத்திய அரசிடம் இது குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டுள்ளது.

அமெரிக்காவில் மேரிலாண்டை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் தொலைக்காட்சி சேனலான டிஸ்கவரி கம்யூனிகேஷனின் அமெரிக்க அறிவியல் சேனல் ஒரு தகவல் வெளியிட்டுள்ளது.   இந்த சேனல் ஒளிபரப்பும் பூமியில் பாலங்கள் நிகழ்வுக்கான முன்னோட்டம் ஒளிபரப்பாகி உள்ளது.   அதில் ராமர் பாலம் பற்றி குறிப்பிடப் பட்டது.

அதில் “ராமர் பாலம் என அழைக்கப்படும் பாலம் இயற்கையானது அல்ல. மனிதனால் உருவாக்கப்பட்டது.  சுண்ணாம்புப் பாறைகள் இயற்கையாக இருக்கலாம்.   ஆனால் அதன் மேலுள்ள கட்டுமானம் சுமார் 7000 வருடங்களுக்கு முன்புள்ள கற்களால் கட்டப்பட்டவை” என தெரிவித்துள்ளது.   மேலும் அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகம், மற்றும் கொலரோடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இதை உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அமெரிக்க தொலைக்காட்சியின் கருத்தை அரசு உறுதிப்படுத்தவில்லை.    ஏற்கனவே இது குறித்து ஆய்வு நடத்தப்போவதாக இந்திய அரசு அறிவித்துள்ளதும்,   அந்த தொலைக்காட்சி குறிப்பிட்ட பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இதை இன்னும் உறுதிப்படுத்தாததும் குறிப்பிடத்தக்கது.