அமெரிக்கா : முதல் இந்து மத எம் பி அடுத்த அதிபர் ஆவாரா?

வாஷிங்டன்

மெரிக்க நாட்டின் முதல் இந்து மத பாராளுமன்ற உறுப்பினர் துளசி வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

நடந்து முடிந்த அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் ஹவாய் தொகுதியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் துளசி கபார்ட் ஆவார். இவர் ஜனநாயகக் கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார். இவர் இந்து மதத்தை சேர்ந்தவர். அமெரிக்காவின் முதல் இந்து மத பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.

துளசி கபார்ட் இந்து மதத்தினர் என்றாலும் இந்தியாவை சேர்ந்தவர் கிடையாது. ஹவாய் செனட் உறுப்பினராக இருந்த மைக் கபார்ட் இவரது தந்தை ஆவார். காகஸ் வம்சாவழியை சேர்ந்த காரல் போர்டர் இவர் தாய் ஆவார். காரல் போர்டர் இந்து மதத்தை தழுவி மத போதகரானதால் அவர் மகளும் இந்து மதத்தை பின்பற்றி வருகிறார்.

அமெரிக்க நாட்டின் முதல் இந்து மத பாராளுமன்ற உறுப்பினரான துளசி கபார்ட் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்த மெட்ரானிக் என்னும் கருத்தரங்கில் கலந்துக் கொண்டார். அப்போது அந்த விழாவில் பேசிய மருத்துவர் சம்பத் சிவாங்கி வரும் 2020 ஆம் ஆண்டு துளசி அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடலாம் என யோசனை தெரிவித்தார்.

ஏற்கனவே வரும் 2020 ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலில் துளசி கபார்ட் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு உள்ளது என அரசியல் நோக்கர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.