சென்னை:

மிழகத்தில் குடிநீர் தேவைகள்  அதிகரித்து வரும் நிலையில், நிலத்தடி நீர் மட்டமும் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. இதன் காரணமாக, விரைவில் தமிழகம் சுடுகாடாக மாறி விடும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ள நிலையில், சமீபத்தில் பெய்து வரும் மழை சற்றே ஆறுதலை அளித்து வருகிறது. இருந்தாலும் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டபடியால், குடிநீருக்காக பலர் கேன் வாட்டர்களையே நம்பி உள்ளனர்.

தற்போது நிலையில், சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு  21 மில்லியன் லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாகவும், இதே நிலை நீடித்தால் ஓரிரு ஆண்டுகளில் நிலத்தடி நீர் மட்டமே காணாமல் போய்விடும் சூழல் உருவாகி விடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவிலேயே அதிக அளவிலான உரிமம் பெற்ற  குடிதண்ணீர் சுத்திகரிக்கும் தனியார் ஆலைகள், தமிழகத்திலேயே அதிகம் இருப்பதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.அதுபோல,  இந்தியாவிலேயே நிலத்தடி நீர் குறைந்து வரும் மாநிலங்களிலும்  தமிழகம் முதலிடத்தில் உள்ளது. என்றும் 40  நரகங்களில்  நிலத்தடி நீர் மட்டம் அபாயகர மான நிலையில் உள்ளது என்ற அதிர்ச்சி தகவலையும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

மேலும் 2020ம் ஆண்டுக்குள்  சென்னை உட்பட 21 இந்திய நகரங்கள் தண்ணீருக்காக அங்கிருந்து வெளியேறும் சூழல் ஏற்படும் என்று நிதிஆயோக் எச்சரித்து உள்ளது.

இந்த நிலையில், நாட்டிலேயே அதிக அளவில் நிலத்தடி நீர் சுரண்டப்படுவதும் தமிழகத்தில்தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழகத்தில்தான் 3,299 உரிமம் பெற்ற மினரல் வாட்டர், பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் கார்பனேற்றப்பட்ட  அலகுகள் மற்றும் பாட்டில் ஆலைகளை  இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது நாட்டில் இயங்கும் மொத்த அலகுகளில் 18% ஆகும். இந்த உரிமங்களை தமிழகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) வழங்கியது.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இந்த குடிநீர் சுத்திகரிப்பு  ஆலைகள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 21 மில்லியன் லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சு எடுக்கின்றன என்றும் சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுமார் 500 குடிநீர் சுத்திகரிப்பு அலகுகள் உள்ளன என்று தமிழ்நாடு தொகுக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுமார் 20லிட்டர் கொண்ட கேன் நிரம்புவதற்கு ஏறக்குறைய 40லிட்டர் நிலத்தடி நீர் தேவைப்படு வதாக கூறப்படுகிறது. இதில் பாதி தண்ணீர் வேஸ்டாக செல்கிறது.

இதுகுறித்து தெரிவித்துள்ள டிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் சங்கேஸ்வரன், ஒவ்வொரு யூனிட்டிலும் வெவ்வேறு உற்பத்தி திறன் மற்றும் தேவை அடிப்படையில் சுத்திகரிக் கப்பட்ட தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 3,000 லிட்டர் உற்பத்தி திறன் உள்ள யூனிட் தொடர்ந்து  ஏழு மணி நேரம் இயங்கும்போது,  ஒரு நாளைக்கு 42,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்று தெரிவித்து உள்ளார். இதில் 50 சதவிகித தண்ணீர் நிராகரிக்கப்பட்ட நீராக வெளியேறுவதாகவும் தெரிவித்து உள்ளார்.

முன்னணி குளிர்பான பெப்சி, கோலா போன்ற  நிறுவனங்களின்  மிகப்பெரிய  கார்பனேற்றப்பட்ட அலகுகள் காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இயங்குகின்றன. ஒவ்வொன்றும் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி வருவதாகவும்  நீர்வளவியல் நிபுணர்  ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

இவை தவிர, ஆந்திரப் பிரதேச எல்லைக்கு அருகிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்திலும் உரிமம் பெறாத 15 தொகுக்கப்பட்ட குடிநீர் அலகுகள் இயங்கி வருவதாகவும் உறுதிப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து கூறியுள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் செயலாளர் சுந்தர்ராஜன்,  “நாங்கள் நிலத்தடி நீர் பேரழிவை தடுப்பது குறித்து நகர்கிறோம். ஆனால், மற்றொருபுறம், மேற்பரப்பு நீர் வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன,  இன்னொருபுறம் நிலத்தடி நீர் வளங்கள் அதிகமாக சுரண்டப்படுகின்றன, இதே நிலை நீடித்தால்  தண்ணீரைத் தேடி மக்கள் வெளி இடங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலை உருவாகிவிடும்  என்று எச்சரித்துள்ளார்.

மேலும், தண்ணீர் சுத்திகரிக்கப்படும் அலகுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், நிலத்தின் மேற்பரப்பில் விடுப்படுவதால், அது  நிலத்தடி நீரின் உப்புத்தன்மையை அதிகரிக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  நீர்வளவியலாளர் ஜே.சரவணன், தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு, தண்ணீர் சுத்திகரிக்கும் எந்தவொரு அலகுக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும், நீர் நெருக்கடி காரணமாக பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு ஐந்தாண்டு தடை விதிக்கப்பட்டிருப்பது போல, தமிழகத்திலும் உயர்அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும், இது காலத்தின் கட்டாயம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நிலத்தடி நீரை சேமிக்கும் விஷயத்தில் தமிழக அரசு அதிரடிநடவடிக்கை எடுக்க வேண்டும்… இல்லையேல் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும்… பொதுமக்கள் ஒவ்வொருவரும் தண்ணீரை சேமிப்பதிலும், மழை நீரை சேமிப்பதிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்… இல்லையேல் வருங்கால சந்ததியினர் தண்ணீருக்காக அலைபாயும் அவலம் ஏற்பட்டு விடும் என்பதில் ஐயமில்லை…