நாடெங்கும் கொரோனா பீதி : பீகார் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கிய பாஜக

டில்லி

நாடெங்கும் கொரோனா பீதி நிலவும் வேளையில் பாஜக தனது பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை வீடியோ மூலம் தொடங்கி உள்ளது.

உலகெங்கும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.   இதுவரை இந்தியாவில் சுமார் 2.57 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.    இதுவரை 7207 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.   பொதுமக்கள், தலைவர்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அனைத்து கட்சிகளும் மத்திய பாஜக அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைகளை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளன.   ஆனால் ஆளும் பாஜக தற்போது பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக இறங்கி உள்ளது.  தற்போது பீகார் மாநிலத்தில் பாஜக பங்கு பெற்றுள்ள கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.

விரைவில் பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான தேர்தல் பிரசாரத்தைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நேற்று பாஜக தொடங்கி உள்ளது.  இதை பாஜக முன்னாள் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா வீடியோ மூலம் தொடங்கி வைத்துள்ளார்.