னோய்

கொரொனா பாதிப்புக்கு இடையிலும் சில ஆசிய நாடுகளில் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கி உள்ளது.

உலகெங்கும் கொரோனா தொற்றால் பல நாடுகள் முழுமையாக முடங்கி உள்ளன.   பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகள் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளன.  சகஜ நிலை வரும் வரை இந்த விமானப் பயணத்தடை நீடிக்கும் என  உலக நாடுகள் அறிவித்துள்ளன.  இந்த நிலை உள்நாட்டுப் பயணங்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசிய நாடுகளான சீனா, வியட்நாம், மலேசியா  தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்  உள்நாட்டு விமானச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.    இந்த நாட்டில் அரசு விமானங்கள் மட்டும் சரக்குகள் போக்குவரத்துக்காக இயங்கி வந்தன. தற்போது ஒரு சில நிறுவனங்களில்  அவசரத்துக்காகப் பயணம் செல்ல உள்ள பயணிகளுக்கு விமான டிக்கட் அளித்துள்ளன.

இது நீண்ட கால நிறுத்தத்துக்குப் பிறகு நடக்கும் ஒத்திகை போன்றது எனவும் விரைவில் சேவைகள் முழு அளவில் தொடங்கக்கூடும் எனவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.   குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை அளிக்கும் ஏர் ஆசியா நிறுவனம் தனது விமான சேவை கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இந்நிறுவனம் நேற்று முதல் மலேசியாவில் உள்நாட்டு விமானச் சேவைகளைத் தொடங்கி உள்ளது.  அத்துடன் தாய்லாந்து நாட்டுக்கு நாளை அதாவது 1 ஆம் தேதியில் இருந்தும் இந்தியாவுக்கு மே 4 ஆம் தேதியில் இருந்தும் இந்தோனேசியாவுக்கு மே 7 ஆம் தேதி முதலும் பிலிப்பைன்சுகு மே16 முதலும் அரசின் உத்தரவைப் பொறுத்து விமானச் சேவைகள் தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலிய விமான நிறுவனமான காண்டாஸ் அந்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களுக்கு  விமானச் சேவையை தொடங்கி உள்ளது.   அரசின் குறைந்த பட்ச விமானச் சேவை என்னும் கொள்கைக்கு ஏற்ப மிகக் குறைந்த அளவில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.  உலகின் மிகவும் பரபரப்பான தடங்களில் ஒன்றான மெல்பர்ன் – சிட்னி தடத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஐந்து விமானச் சேவைகள் இருந்தது.  தற்போது வாரத்துக்கு 7 சேவைகள் நடைபெறுகிறது.

தாய்லாந்து நாட்டில் உள்ள வேறு சில குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனங்களும் மே மாதம் 1 முதல் ஒரு சில தடங்களில் சேவை செய்ய உள்ளன.  வியட்நாம் நாட்டில் கடந்த 23 ஆம் தேதி முதல் நாட்டில் உள்ள இரு பெரு நகரங்களான ஹனோய் மற்றும் ஹோ சி மின் இடையே விமானச் சேவைகள் நடை பெற்று வருகின்றன.

இந்த விமானங்களில் சமூக இடைவெளிக்காக ஒவ்வொரு பயணிக்கும் இடையே ஒரு இருக்கை காலியாக விடப்படுவதால் எந்த விமானமும் முழு கொள்ளளவுடன் இயக்கப்படுவதில்லை.  வியட்நாம் நாட்டைப் பொறுத்தவரை சில சுற்றுலாத் தலங்களுக்கு வர உள்நாட்டுப் பயணிகளுக்கு அரசு பச்சைக் கொடி காட்டி உள்ளது.    தற்போது வியட்நாம் நாட்டில் 268 பேருக்குப் பாதிப்பு உள்ளது.  ஒருவர்  கூட  மரணம் அடையவில்லை.