கொரோனா பரவலிலும் அதிக சொத்து வரி வசூல் செய்த சென்னை மாநகராட்சி

சென்னை

டந்த 4 வருடங்களில் இல்லாத அளவுக்கு சென்ற மாதம் சென்னையில் சொத்து வரி அதிக அளவில் வசூலாகி உள்ளது.

தமிழகத்திலேயே அதிக அளவில் கொரோனா பாதிப்பு சென்னையில் உள்ளது,   நேற்று வரை சென்னையில் 2,03,085 பேர் பாதிக்கப்பட்டு 3,693 பேர் உயிர் இழந்து 1,93,312 பேர் குணம் அடைந்து தற்போது 6,080 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  கொரோனா பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆயினும் சென்ற மாதம் சென்னை மாநகராட்சிக்கு மொத்தம் 1,38,187 பேர் சொத்து வரி செலுத்தி உள்ளனர்.   மொத்தம் ரூ. 91 கோடி சொத்து வரி செலுத்தப்பட்டுள்ளது.  கடந்த 4 வருடங்களில் இல்லாத அளவுக்குச் சென்ற மாதம் சென்னை மாநகராட்சியில் சொத்து வரி வசூல் ஆகி உள்ளது.

சென்ற வருடம் இதே கால கட்டத்தில் 61,864 பேர் வரி செலுத்தி உள்ளனர்.  இது இந்த வருடத்தில் பாதி ஆகும்.  அப்போது மொத்தம் ரூ.71 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 59,072 பேர் மொத்தம் ரூ.55 கோடியும் கடந்த 2017 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 70,865 பேர் ரூ,50 கோடியும் கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 73,754 பேர் ரூ.51.8 கோடியும் செலுத்தி உள்ளனர்.

இது குறித்து மூத்த மாநகராட்சி அதிகாரி ஒருவர், “இந்த வருடம் அதிக அளவில் வசூலானதற்குக் காரணம் மாநகராட்சி வழங்கிய 5% கழிவே காரணமாகும்.  இந்த கழிவு இறுதி தேதிக்குள் வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்டது.    இதைத் தவிர இந்த கொரோனா பரவல் காலத்திலும் வரியை சரியான நேரத்தில் செலுத்திய மக்களே முக்கிய காரணமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.