கர்ப்பிணிகளுக்கு இலவச ஆட்டோ ஓட்டும் ராமகிருஷ்ணன்

கர்ப்பிணிகளுக்கு இலவச ஆட்டோ ஓட்டும் ராமகிருஷ்ணன்

மதுரையில் கொரோனா முழு ஊரடங்கால் ஆட்டோ ஓட்டுநர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். வருவாய் குறைந்த நிலையிலும் ராமகிருஷ்ணன் என்பவர், இப்போதும் கர்ப்பிணிகளுக்கு இலவசமாகவே ஆட்டோ ஓட்டி வருகிறார்.

அண்மையில், கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியில் துடித்து கொண்டிருந்த போது அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கட்டணம் வாங்காமல் சேவை மனப்பான்மையுடன் உதவி செய்த பின் வீடு திரும்பியுள்ளார். அப்போது மதுரை கோரிப்பாளையம் போக்குவரத்து சந்திப்பில் போக்குவரத்து காவல்துறையினர் ஆட்டோவை மடக்கி, ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி, 500 ரூபாய் அபராதமாக விதித்துள்ளனர்.

கர்ப்பிணிக்கு உதவிய தன்னிடத்தில் போலீஸார் நடந்து கொண்ட விதத்தால், ராமகிருஷ்ணன் மனம் நொந்து போனார். இந்த சம்பவம் குறித்து நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு வாட்ஸப்பில் வீடியோ ஒன்றை வெளியிட அது வைரலானது.

மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவும், இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக ஆட்டோ ஓட்டுநரை தொடர்பு கொண்டு போலீசாரின் செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். மேலும் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும் ரத்து செய்தார்.

பின்னர் சம்பந்தப்பட்ட காவலர்களை பொதுமக்களிடத்தில் கண்ணியத்துடனும் அன்புடனும் போலீசார் நடந்து கொள்ள வேண்டுமென்று மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அறிவுறுத்தியுள்ளார்.

– லெட்சுமி பிரியா