அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ரூ.80 கோடியில் 400 சொகுசு கார்கள்: பஞ்சாப் அரசு ஒப்புதல்

சண்டிகர்:

மாநில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் தேவைக்காக 400 சொகுசு கார்களை 80 கோடி ரூபாய் செலவில் வாங்க பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்து அதற்கான ஒப்புதலும் அளித்து உள்ளது.

மாநில அரசு கடுமையான கடன் சுமைகளின் காரணமாக தத்தளித்து வரும் நிலையில், இவ்வளவு அதிக தொகையில் கார்கள் வாங்க ஒப்புதல் அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மார்ச் மாதம் மாநில அரசு தாக்கல் செய்த  வருடாந்திர பட்ஜெட்டில்,  மாநில அரசு ரூ.1,95,978 கோடி கடனை எதிர்கொண்டு வருகிறது மாநில நிதி அமைச்சர் கூறினார். மேலும், அதை ஈடு செய்ய  வருமான வரி செலுத்துபவர்களிடம் கூடுதலாக மாதந்தோறும் ரூ.200 வளர்ச்சி வரியாக வசூலிக்கப்படும் என அறிவித்தார்.

இந்த நிலையில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் தேவைக்காக  ரூ.80 கோடி செலவில் 400 சொகுசு கார்கள்: பஞ்சாப் அரசு வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அமரிந்தர் சிங் அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள்,  விவசாய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக அரசு விடுத்துள்ள அறிக்கையில், முதலமைச்சருக்கு 16 லேண்ட் க்ரூஸர்ஸ் (2 குண்டு துளைக்காத) கார்கள், தலைமைச்செயலாக முக்கிய  அதிகாரிகளுக்கு 13 ஸ்கார்பியோ கார்கள், சிறப்பு பணி அதிகாரிகளுக்கு 14 மாருதி டிசையர், எர்ட்டிகா, ஹோண்டா அமேஸ் கார்கள் வாங்கப்பட உள்ளன.

மேலும், அமரிந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவையில் உள்ள  17 அமைச்சர்களுக்கு டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களும், 97 எம்.எல்.ஏக்களுக்கு இன்னோவா கிரிஸ்டாஸ் கார்களுக்கும் வாங்க  அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த சொகுசு வாகனங்கள் கொள்முதலுக்கு, பாரதிய கிசான் ஒன்றியம் உட்பட பல்வேறு விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மாநிலம் கடும் கடன் சுமையில் தள்ளாடி வரும் நிலையில் இது அரசுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும் என தெரிவிக்கின்றன.