சாதி வன்மத்துடன்  அமீர் பேசிவிட்டார்!:  நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வருத்தம்

--

ன்னைப்பற்றி இயக்குநர் அமீர், சாதீய வன்மத்துடன் பேசிவிட்டதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள மீடூ விவகாரம் தமிழகத்திலும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பாடகி சின்மயி, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபல பெண்கள், வைரமுத்து, சுசுகணேசன் உள்ளிட்ட பல் மீது பாலியல் புகார்களைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரி செல்வஜூக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர் மீ டூ குறித்தும் பேசினார்.

அப்போது அவர், “பெண்களை ஆண்கள்  யாரும் மதிப்பதில்லை என்று கூறுவது தவறு பெண்கள் பெண்களை மதிக்கிறார்களா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. .

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றவர்கள் மீ டூ-வில் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தார்கள். ஆனால்  இதே பிரச்சனையில் சிக்கி பலியான தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சேலம்  சிறுமி ராஜலட்சுமிக்கு ஆதரவு தரும் வகையில் ஏன் குரல் கொடுக்கவில்லை ராஜலட்சுமிக்கு நிகழ்ந்த நிகழ்ந்த கொடுமையை பேச முன்வரவில்லை.

இங்கும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பெண்ணுக்கு நிகழும் கொடுமைகள் குறித்துப் பேச யாரும் முன்வருவதில்லை. இதிலும் சாதியும் பார்க்கப் படுகிறது” என்று பேசினார்.

இந்த நிலையில் அமீர் பேச்சுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன், தனது முகநூல் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிக்கை , மற்றும் ஊடக நண்பர்களுக்கு எனது பணிவான வணக்கம் . சமீபத்தில் சகோதரர் அமீர் பேசியதை கேட்டேன் .என்னை குறிப்பிட்டு சில வார்த்தைகள் விட்டிருக்கிறார். எனது தந்தை மறைந்து போன இந்த தருணத்தில், பகையூட்டும் ஜாதி வன்மம் கொண்ட சகோதரர் அமீர் பேசிய வார்த்தைகள் தான் மிகவும் வேதனை அளிக்கிறது.
அவர் இப்பொழுது தொடுத்த ஜாதி விஷமார்ந்த அம்பு, ஒரு நாள் அவரை நோக்கியும் பாயலாம். கை தட்டல் வாங்குவதற்காக இந்த சமுதாயத்தை எரித்துக் கொண்டு இருக்கும் ஜாதி என்னும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம். பாதிக்கப்பட்டவர்கள் ஜாதியை பார்த்து நான் குரல் கொடுப்பது இல்லை.


என் மீது குற்றம் சாட்டும் சகோதரர்களே, உங்களது முகத்திலிருந்து ஜாதி சாயம் பூசிய கண்ணாடியை நீக்கிவிட்டு பாருங்கள். பல ராஜலக்ஷ்மிகளுக்காகவும் நந்தினிகளுக்காகவும் நான் துடித்து போனதும், குரல் கொடுத்ததும் உங்கள் கண்ணுக்கு தெரியும். மூன்று வருடங்களுக்கு முன்னால், பத்து பெண்களுக்கு பெண்கள் தினத்தன்று பிஜேபி அலுவலகத்தில் ஒரு விருது வழங்கப்பட்டது. அந்த புகைப்படத்தை இப்பொழுது இணையத்தில் உலவ விட்டு தவறாக சித்தரித்து இருக்கிறார்கள். அதே போல் என்னுடைய மீ டூ ஸ்டோரியை சகோதரர் அமீர் அவர்கள் தவறாக சித்தரித்து பரப்பிக்கொண்டு இருக்கிறார்.
என் தந்தையார் எனக்கு ஜாதி வெறி ஊட்டி வளர்க்கவில்லை. ராஜாஜி அவர்களையும் பெரியார் அவர்களையும் ஒரே மாதிரி நேசித்து ,அவர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை எல்லாம் தாண்டி இருவரிடமும் இருக்கும் நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு வாழ்ந்த தந்தைக்கு பிறந்த மகள் நான். அவர் வகுத்த பாதையில் தான் என்றும் பயணிப்பேன்” – இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.