கொல்கத்தா: நாட்டின் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுவரும் வீழ்ச்சியானது, இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி வேகமாக செல்வதைக் காட்டுகின்றன என்று எச்சரித்துள்ளார் மேற்குவங்க மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா.

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜிடிபி வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறது. உற்பத்தித்துறை, தொழில் முதலீடுகள் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக் குறியீடு ஆகிய அனைத்தும் தற்போது நெருக்கடியில் உள்ளன.

அரசியலில் நுழைவதற்கு முன்னர், இந்தியன் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரீயின் பொதுச்செயலாளர் பதவியை வகித்தவர் அமித் மித்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி அரசு தொழில்துறையினரை இம்சிக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ள அவர், அச்சம் காரணமாக நாட்டிலுள்ள தொழில்கள் பலவும் நாட்டைவிட்டு வெளியேறுகின்றன என்றுள்ளார்.

மேலும், வளர்ச்சியை அதிகரிப்பதற்கான எந்த முக்கிய நடவடிக்கை விபரங்களும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று கூறியுள்ள அவர், நிதியமைச்சகம் உருப்படியாக எதையும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.