amith sha
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் காங்கிரசிடமிருந்து  ஆட்சியைக் கைப்பற்ற அனைத்து ராஜதந்திரங்களையும் பா.ஜ.க மேற்கொண்டு வருகின்றது.
பா.ஜ.க, தேசியத் தலைவரும், சாணக்கியருமான அமித் ஷா, சனிக்கிழமையன்று  பத்திரிக்கையாளர் சந்திப்பில்  அஸ்ஸாம்  முதல்வர் தருண் கொகொயை வீழ்த்தும் பகீரத முயற்சியாக, “அடுத்து அஸ்ஸாமில் ஆட்சி அமைக்கும் பா.ஜ.க, காங்கிரஸ் முதல்வர் தருண் கொகொயின் ஊழல் குறித்து விசாரணைக்கு உத்தரவிடும்” எனத் தெரிவித்தார்.
அஸ்ஸாம் முதல்வர் தருண் கொகொயின் அமைச்சரவையில் குவகாத்தி வளர்ச்சித் துறை அமைச்சராய் இருந்தவர் ஹிமாந்தா பிஸ்வா ஷர்மா. இவரது நிர்வாகத்தின் போது தான் , கோவா மற்றும் குவகாத்தியில் நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கான டெண்டர்களை பெறுவதற்காக  ஒரு அமெரிக்க நிறுவனம் லஞ்சம் கொடுத்த தகவல் வெளியானது. இதை அடுத்து அவர் லஞ்ச ஒழிப்புத்துறையின் கண்காணிப்பில் இருந்து வந்தார். அவர் திடீரெனக் கட்சித் தாவி பா.ஜ.கவில் இணைந்திருந்தார்.
இதனைச் சுட்டிக் காட்டும் வகையில் ஒரு பத்திரிக்கையாளர்,  “முதல்வர் மீது விசாரணை நடத்தும் நீங்கள், அவரது அமைச்சரவையில் இருந்த ஹிமாந்தா பிஸ்வா ஷர்மாவின் ஊழல் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிடுவீர்களா எனக் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்ப்பார்க்காத  அமித் ஷா ஒரு நிமிடம் திகைத்துப் போய் விட்டார். பின்னர் சுதாரித்துக் கொண்டு, சிரித்துக் கொண்டே மழுப்பலாக “இது போன்றக் கேள்விகளை நீங்கள் கேட்கக் கூடாது என்றார்.
ஒரு தீவிரமான கேள்விக்கு சிரிப்பை பதிலாகத் தந்ததன்  மூலம்  ஒரு ஊழல் பேர்வழியை பா.ஜ.க,  காங்கிரஸில் இருந்து இறக்குமதி செய்துள்ளது என்பதன் ஒப்புதல் வாக்குமூலம் எனவேக் கருதவேண்டியுள்ளது.