நாட்டின் பாதுகாப்புப் படைகள் பிரதமர் மோடிக்கோ அமீத்ஷாவுக்கோ சொந்தமானவை அல்ல: திரிணாமூல் காங்கிரஸ் கடும் தாக்கு

கொல்கத்தா:

பாதுகாப்புப் படைகள் இந்தியாவுக்கு சொந்தமானவை, பிரதமர் மோடிக்கோ அல்லது அமீத்ஷாவுக்கோ சொந்தமானவை அல்ல என்று திரிணாமூல் காங்கிரஸ் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளது.


திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் டெரெக் ஓபிரின் செய்தியாளர்களிட் கூறியதாவது;

விமானப்படை தாக்குதலை தங்களது வெற்றியாக மோடியும், அமீத்ஷாவும் நினைக்கிறார்கள். மற்றவர்களை விமர்சிப்பதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். பிரிவினைவாத அரசியலையும், வெறுப்பு அரசியலையும் வளர்க்கும் மோசமான அரசியல்வாதிகளாக மோடியும், அமீத்ஷாவும் உள்ளனர்.

விமானப் படை தாக்குதலை தங்களுக்கு சாதகமாக பேசுவதை பாஜக தலைவர்கள் நிறுத்தவேண்டும்.
பாதுகாப்புப் படை இந்தியாவுக்கு சொந்தமானவை. பிரதமர் மோடிக்கோ அல்லது அமீத்ஷாவுக்கோ சொந்தமானவை அல்ல.

இவர்கள் எல்லாம் சுதந்திரப் போராட்ட காலத்தில் மேஜைக்கு கீழே மறைந்து கொண்டவர்கள். இப்போது தேச பக்தியைப் பற்றி பேசுகிறார்கள்.
இவ்வளவு நாட்களாக தீவிரவாத தாக்குதலுக்கு அமைதியாக இருந்துவிட்டு, தற்போது விமானப்படை தாக்குதல் நடத்துவது கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கையை காட்டுகிறது என்றார்.