டில்லி

தேசிய குடியுரிமை பதிவேட்டுக்கும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பாஜக அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடெங்கும் கடும் போராட்டம் நடந்து வருகிறது.   பல இடங்களில் வன்முறை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  நேற்று டில்லியில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.   இந்த பதிவேடு மற்றும் கணக்கெடுப்புக்கு ரூ.13000 கோடி ஒதுக்கப்பட உள்ளது.  இதில் பதிவேடு தயாரிக்க ரூ8500 ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் மூலம் குடியுரிமை பதிவேடு தயாரிக்க உள்ளதாகப் பலரும் கூறி வருகின்றனர்.   இதனால் மக்கள் இடையில் கடும் குழப்பங்கள் ஏற்பட்டது.   நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏ என் ஐ செய்தி  நிறுவனத்துக்குப் பேட்டி ஒன்றை அளித்தார். அந்த பேட்டியில் தேசிய குடியுரிமை பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

அமித் ஷா தனது பேட்டியில், “ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் தேசிய மக்கள் தொகை பதிவேடு கொண்டுவரப்பட்டது. நாங்கள் அதை அப்படியே தொடர்கிறோம். இது ஒரு நல்ல விஷயம் என்பதால் நாங்களும் அதைப் பின்பற்றுகிறோம். தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு மக்கள் தொகை பதிவேடு பயன்படுத்தப்பட மாட்டாது.  இந்த தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் மூலம் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. குடியுரிமை பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டமும் இப்போதைக்கு இல்லை எனப்  பிரதமர் மோடி சொன்னது சரிதான்.  அதைப் பற்றி  எந்த ஆலோசனையும் இப்போது நடக்கவில்லை.

பொதுமக்களில் எந்த ஒருவரின்  பெயர் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் விடுபட்டாலும் அதனால் அவரது குடியுரிமையில் எந்த பிரச்சினையும் ஏற்படாது.   தேசிய மக்கள் தொகை பதிவேடு அரசுத் திட்டங்களின் கட்டமைப்புக்காக உருவாக்கப்படுகிறது.  இதில் உங்கள்  வீட்டின் பரப்பளவு என்ன, உங்களிடம் எத்தனை கால்நடைகள் உள்ளன போன்ற சில விஷயங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தொடர்பாக அதிகாரிகள் உங்கள் வீட்டுக்கு வந்து விண்ணப்பத்தில் தகவல்களை பூர்த்தி செய்வார்கள். தவிர உங்களிடம் எந்த ஆவணங்களும் கேட்க மாட்டார்கள். ஒருவேளை ஆதார் அட்டைகள் மட்டும் தேவைப்படலாம். உங்களிடம் ஆதார் அட்டைகள் உங்களிடம் இருந்தால் அதைக் கொடுப்பதில் என்ன பிரச்சினை?

கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட மாநில அரசுகள் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என்ற முடிவை பரிசீலிக்க வேண்டும்.  அந்த மாநில அரசுகள் அரசியலுக்காக ஏழைகளின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றன.

நான் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையைக் கேளுங்கள்.   சிறுபான்மையின மக்கள் யாரும் இந்த சட்டத் திருத்தம் மூலம் தங்களது குடியுரிமையை இழக்கப்போவதில்லை எனத் தெளிவாக எனது உரையில் கூறியுள்ளேன்.

ஏற்கனவே நீண்ட காலமாக இந்தியாவில் தடுப்பு மையங்கள் இருக்கிறதே தவிர மோடி அரசு புதிதாகத் தடுப்பு மையங்களைக் கட்டவில்லை.  நமது இந்திய அரசுக்கு என்று சில சட்டங்கள் இருக்கின்றன.  நாம் அதன்படிதான் நடக்க முடியும்.  யாரை வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது.  இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த நபர்கள் சிக்கும்போது அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தடுப்பு மையங்களில் வைக்கப்படுவார்கள்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான ஓவைசியின் நிலைப்பாட்டில் எங்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. நாங்கள் சூரியன் கிழக்கே உதிக்கிறது என்றால் அவர் மேற்கில் உதிக்கிறது என்பார்.” என விளக்கம் அளித்துள்ளார்.