டில்லி

கோரக்பூர் அரசு மருத்துவமனையில் சுமார் 70 குழந்தைகள் ஆக்சிஜன் தட்டுப்பாடால் மரணம் அடைந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் உ.பி.யில் நிகழ்ந்துள்ள குழந்தை இறப்பு குறித்து பேசிய பாரதியஜனதா தேசிய தலைவர், இவ்வளவு பெரிய நாட்டில், இது ஒன்றும் முதல் நிகழ்வல்ல என்று அலட்சியமாக கூறினார்.

கோரக்பூர்  மருத்துவமனையில் சுமார் 70 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதே நேரத்தில் கிருஷ்ண ஜெயந்தியை விமரிசையாக கொண்டாட வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யா உத்தரவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு பொறுப்பேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகிறார்கள்,

இந்நிலையில், பாரதியஜனதா தலைவர்  இது குறித்து அமித்ஷா கூறியதாவது :

“காங்கிரஸ் கட்சியினருக்கு யாரையாவது ராஜினாமா செய்யச் சொல்வதே வேலையாகி விட்டது.  இந்தியாவைப் போன்ற இவ்வளவு பெரிய நாட்டில் இது போல நிகழ்வது முதல் தடவை அல்ல.   இது போல பல நிகழ்வுகளை இந்த நாடு பலமுறை கண்டுள்ளது.

மேலும் கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டங்களையும் பலர் எதிர்த்து வருகின்றனர்.   நமது நாட்டில்தான் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட முடியும்.   மற்ற மாநிலங்களில் கொண்டாடுவதைப் போல உத்திரப் பிரதேச மக்களும் கொண்டாடுகிறார்கள்.

இது மத விழா.  அரசு விழா அல்ல” என தெரிவித்துள்ளார்.