கர்நாடகா தேர்தல் 2018 : அமித்ஷாவும் மொழி பெயர்ப்பாளரும்

சிக்மகளூர்

பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு  கர்நாடக மொழி பெயர்ப்பாளர்களால் தொல்லை ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

கடந்த மார்ச் மாதம் அமித் ஷா கர்நாடக மாநிலம் தாவண்கரேவில் ஒரு கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.  அப்போது அவர் முன்னாள் உச்சநிதிமன்ற நீதிபதி ஒருவர் எடியூரப்பா அரசு ஊழலில் முதல் இடத்தை பிடித்துள்ளதாக கூறி உள்ளதாக தெரிவித்தார்.   அதன் பிறகு அருகில் இருந்தவர்கள் சுட்டிக் காட்டியதும் தவறை திருத்திக்கொண்டு சித்தராமையா அரசு என மாற்றிப் பேசினார்.     அதன் பிறகு அவர் தனது பேச்சில் கவனத்துடன் இருந்தாலும் மொழி பெயர்ப்பாளர்களால் அவருக்கு தற்போது தொல்லை அதிகரித்து வருகிறது.

அமித் ஷா கர்நாடக தேர்தலை ஒட்டி சிக்மகளூர் மற்றும் சிருங்கேரியில் நடந்த பேரணிகளில் கலந்துக் கொண்டார்.    சிக்மகளூரில் அவர் பேசிய போது ஒலிபெருக்கி அடிக்கடி தொல்லை கொடுத்தது.   அமித் ஷா பேசிய போது தொடர்ந்து 12 நிமிடங்கள் மொழி பெயர்ப்பாளரால் சரியாக கேட்க முடியாததால் மொழி பெயர்ப்பதை நிறுத்தி விட்டார்.  இதனால் எரிச்சல் அடைந்த அமித்ஷா மொழிபெயர்பாளரை முறைத்துப் பார்த்தது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் சிரிப்பை வரவழைத்தது.

அத்துடன் அமித் ஷா மோடியை நமது பாஜகவின் பிரதமர் என குறிப்பிட்டது பார்வையாளர்களுக்கு மேலும் சிரிப்பை உண்டாக்கியது.  அவர், “நமது பாஜகவின் பிரதமர் அம்பேத்கார் நினைவாக மக்களவையில் ஒரு கூட்டம் நடத்தினார்.” எனக் குறிப்பிட்டார்.   கூடியிருந்த பார்வையாளர்கள் அவர் பாஜகவின் பிரதமர் இல்லை எனவும் பாரத நாட்டின் பிரதமர் எனவும் பேசி சிரித்துக் கொண்டனர்.

அதே போல சிருங்கேரியில் நடந்த கூட்டத்திலும் அமித் ஷாவுக்கு மொழி பெயர்ப்பாளரால் மிகவும் தொல்லை உண்டானது.   அமித்ஷா ”மோடி ஒரு மின் உற்பத்தி நிலையம்.   சித்தராமையா ஒரு டிரான்ஸ்ஃபார்மர்.   இந்த டிரான்ஸ்ஃபார்மர் மாநில மக்களுக்கு முழுமையாக மோடி அளிக்கும் மின்சாரத்தை அளிக்கவில்லை” என குறிப்பிட்டார்.

மொழி பெயர்ப்பாளர் அதை மோடி ஒரு டிரான்ஸ்ஃபார்மர் எனவும் சித்தராமையா மின் உற்பத்தி நிலையம் எனவும் மாற்றி சொல்லி விட்டார்.    இதனால் கோபம் அடைந்த அமித்ஷா மொழிபெயர்ப்பாளரிடம் குறுக்கிட்டு திருத்தினார்.   அதே நேரத்தில் அவர் சைகை மொழிகளுடன் பேசியது பார்ப்பவர்களுக்கு மிகவும் நகைச்சுவையாக இருந்தது.

அமித்ஷா, “நன்பர்களே, இந்தப் பகுதியில் காபித் தோட்டங்கள் ஏராளமாக உள்ளன. சித்தராமையாவின் கவனக்குறைவால் காபித்தோட்டங்கள் கருகி வருகின்றன” என கூறினார்.  அதற்கு மொழி பெயர்ப்பாளர். “சித்தராமையாவின் அரசு கருகி வருகிரது” என மொழி பெயர்த்ததில் அமித்ஷா மீண்டும் கோபமுற்றார்.  அத்துடன் பல முறை அமித்ஷாவின் பேச்சை மொழி பெயர்க்காமல் நின்றுக் கொண்டிருந்தது அவருக்கு மேலும் எரிச்சலை உண்டாக்கியது.

கார்ட்டூன் கேலரி