ராஜஸ்தான் : முதல்வர் இல்லாமல் அமித்ஷா நடத்தும் பேரணி

ஜெய்ப்பூர்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ராஜஸ்தான் மாநில முதல்வர் இல்லாமல் தனியாக பேரணிகளை நடத்தி வருகிறார்.

ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தர ராஜே பாஜகவின் மூத்த தலைவரான அத்வானிக்கு மிகவும் வேண்டியவர் ஆவார்.  அதனால் பாஜகவின் தற்போதைய தலைமைக்கு வசுந்தர ராஜே மீது கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது.   ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் அசோக் பர்னாமி கடந்த ஏப்ரல் மாதம் ராஜினாமா செய்தார்.

அவருக்கு பதிலாக அமித்ஷா அறிவித்த கஜேந்திர சிங் ஷேக்வாட்டை முதல்வர் ஏற்க மறுத்தார்.   அதற்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கு பல கட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன.   இறுதியாக இரு தரப்பினரும் மதன்லால் சைனியை மாஇல தலைவராக நியமிக்க ஒப்புக் கொண்டனர்.   தற்போது ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவடைய உள்ளதால் தேர்தலை அனைத்துக் கட்சியினரும் எதிர் நோக்கி உள்ளனர்.

தேர்தலை முன்னிட்டு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பல பேரணிகளை நிகழ்த்தினார்.   ஆனால் அவற்றில் ஒரு பேரணியில் கூட முதல்வர் வசுந்தர ராஜே கலந்துக் கொள்ளவில்லை.    அதே நேரத்தில் தேர்தலை எதிர் நோக்கி உள்ள மற்ற இரு மாநிலங்களான மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் அமித்ஷாவின் பேரணிகளுக்கு அம்மாநில முதல்வர்கள் கலந்துக் கொள்கின்றனர்.

வசுந்தர ராஜே சமீபத்தில் நடத்திய பேரணியில் அமித்ஷா கலந்துக் கொண்ட போதிலும் அமித்ஷா நடத்தும் ஒரு பேரணியில் கூட முதல்வ்ர் கலந்துக் கொள்ளாதது பாஜக தொண்டர்களிடையே பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.   வசுந்தர ராஜேவின் ஆதரவாளர் ஒருவர்,  ”அமித்ஷாவின் பேரணியில் கலந்துக் கொள்ள முதல்வர் விரும்பினார் ஆனால் அமித்ஷா அதை மறுத்து விட்டார்.  தற்போது முதல்வர் நடத்தும் பேரணியில் அவர் முழு கவனம் செலுத்த வேண்டும் என அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.