தேசிய குடியுரிமை பட்டியல் குறித்து பொறுப்பற்ற தகவல் தரும் அமித்ஷா : காங்கிரஸ் தாக்கு

வுகாத்தி

தேசிய குடியுரிமை பட்டியல் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பற்ற தகவல்கள் தெரிவிப்பதாக அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி சுஷ்மிதா தேவ் கூறி உள்ளார்.

அசாம் மாநில தேசிய குடியுரிமைப் பட்டியல் உருவாக்க இந்த மாதம் 31 ஆம் தேதி இறுதி நாளாகும். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷா இறுதிப் பட்டியலில் சுமார் 40 லட்சம் பேர்கள் இடம் பெற மாட்டார்கள் எனவும் அவ்வாறு இடம் பெறாதவர்கள் சட்டவிரோதமாக நாட்டில் நுழைந்தவர்களெனக் கருதப்பட்டு நடை விட்டு வெளியேற்றப்படுவார்கள் எனவும் தகவல்கள் எழுந்தன.

இது அசாம் மாநில மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தஒஅவியும் முன்னாள் மக்களவை  உறுப்பினருமான சுஷ்மிதா தேவ் கவுகாத்தியில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார். அப்போது அவர், “அசாம் மாநில மக்கள் அமைதியை விரும்புபவர்கள். தேசிய குடியுரிமைப் பட்டியல் வெளியான பிறகு எந்த ஒரு வன்முறை நிகழ்வதையும் அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

ஆனாக் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இந்த பட்டியலில் இடம் பெறாத 40 லட்சம் பேர் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் எனவும் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அது ஒரு பொறுப்பற்ற தகவல் ஆகும். இவ்வாறு கூறுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

வரைவுப் பட்டியலில் சுமார் 40 லட்சம் பெயர்கள் விட்டுப்போனதாகக் கூறப்படுகிறது. அவர்களில் 30-40% பேர் இறுதிப் பட்டியலில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளனர்.  அவர்கள் பெயரில் இருந்த எழுத்துப் பிழை காரணமாக முதலில் இடம் பெறவில்லை. தற்போது அது சரி செய்யப்பட்டது. அது மட்டுமின்றி மற்றவர்கள் குறித்தும் ஆய்வு நடைபெறுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.