புதுடெல்லி: நக்சலைட் பிரச்சினை நிலவும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு நடத்தினார்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ், சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், உயர் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய உயரதிகாரிகளும் இந்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். நக்சல்களுக்கு எதிராக தற்போது எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் மற்றும் நக்சல் பாதித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட்டது.

அமித்ஷா உள்துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர் நடைபெறும் இந்த வகையிலான முதல் உயர்நிலைக் கூட்டம் இதுவேயாகும் என்று கூறப்படுகிறது. கடந்த 2009-13 காலகட்டங்களில் பதிவான நக்சல் வன்முறை நிகழ்வுகளின் எண்ணிக்கை 8,782.

ஆனால், கடந்த 2014-18 காலகட்டங்களில் பதிவான நக்சல் வன்முறை நிகழ்வுகளின் மொத்த எண்ணிக்கை 4,969 மட்டுமே. எனவே, நக்சல் தாக்குதல்கள் 43.4% குறைந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.