புவனேஸ்வர்

ரப்போகும் 2019 ஒரிசா சட்டமன்ற தேர்தலில் பா ஜ க தனித்துப் போட்டியில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 120 ஐ கைப்பற்றும் என அமித்ஷா கூறி உள்ளார்.

தற்போது ஒரிசா சட்டசபையில் பா ஜ க வுக்கு 10 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.  வரும் 2019ஆம் வருடம் ஒரிசாவுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  எனவே கட்சியின் தொண்டர்களை ஊக்குவிக்க அமித்ஷா ஒரிசாவுக்கு வந்துள்ளார்.  ஒரிசாவில் தனது கட்சியின் வெற்றி வாய்ப்பைக் கண்டறிய வந்துள்ளதாக சொல்லப்பட்டாலும், மாநிலத்தின் தேர்தல் பொறுப்பை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அளிப்பது பற்றி ஒரிசா பா ஜ க நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்த்த வந்துள்ளதாகவே தெரிகிறது.  உத்தரகாண்ட் பா ஜ க வெற்றிக்குப் பிறகு மோடி மற்றும் அமித்ஷாவுக்கு பிரதான் மிகவும் நம்பிக்கைக்குரியவராகி விட்டதே இதற்குக் காரணம்.

தனது வருகையின் போது பத்திரிகையாளர்களை சந்தித்து அமித்ஷா பேசினார். அப்போது “வரும் சட்டமன்ற தேர்தலில் பா ஜ க தனித்து நின்று 120 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.  மக்கள் பழைய ஆட்சியாளர்கள் மீது மிகவும் நம்பிக்கை இழந்துள்ளதால் எங்களையே தேர்ந்தெடுப்பார்கள்.  நாடு முழுவதும் தற்போது வீசி வரும் பா ஜ க அலை இந்த மாநிலத்திலும் நிச்சயம் தொடரும்.

தற்போதுள்ள நவீன் பட்நாயக் அரசு மத்திய அரசுடன் எதற்கும் ஒத்துப் போவதில்லை. முதல்வருக்கு பத்திரிகை அளிக்கும் விருதை பற்றி பெருமை அடித்துக் கொள்ளவே நேரம் போதவில்லை.  வளர்ச்சி திட்டங்களுக்காக மத்திய அரசு அளித்த ரூ. 4 லட்சம் கோடி தொகை இதுவரை செலவிடப்படாமல் அரசிடம் உள்ளது.  மத்திய அரசு அந்த வளர்ச்சிப் பணிகளை எடுத்து நடத்த தயாராக இருந்தும், மாநில அரசு ஒத்துழைக்கவில்லை.  லஞ்சம் கிடைக்குமா என எதிர்பார்ப்புடன் இருக்கும் மாநில அரசு, மற்றும் அரசுக்கு நெருக்கமானவர்கள் என அனைவருமே சுரங்க ஊழல் மற்றும் சிட்ஃபண்டு ஊழலில் காட்டும் அக்கறையை மக்கள் வளத் திட்டத்தில் காட்டுவதில்லை” என கூறினார்.