தூத்துக்குடி துப்பாக்கி சூடு தேவையில்லாமல் நடந்துள்ளது  என்று அமித்ஷா குற்றச்சாட்டியுள்ளார்.

 

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

தமிழக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர்களும்  இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை விமர்சித் கருத்து தெரிவித்திருந்தனர். .

இது சம்பந்தமாக பாரதிய ஜனதா தலைவர்கள் சிலர், “ தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சட்டம்- ஒழுங்கு பிரச்சினை தொழில் முதலீட்டுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது” என்று கூறி இருந்தனர்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் பயங்கரவாதிகள் இருப்பதாக கூறினார். 18 மாதங்களுக்கு முன்பே இது சம்பந்தமாக தான் எச்சரித்து இருந்ததாகவும் அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த துப்பாக்கி சூடு நடந்திருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாரதிய ஜனதாவின் அகில இந்திய தலைவர் அமித்ஷாவும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்  குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக தமிழக அரசு, தனது விளக்கங்களை மத்திய உள்துறைக்கு அனுப்பி இருக்கிறது.  இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத்சிங் சில விளக்கங்களை கேட்டிருக்கிறார். விளக்கங்களை எதிர்பார்த்து மத்திய அரசு காத்து இருக்கிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு சம்பவத்தை கையாண்ட முறை சரியில்லை. காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை தவிர்த்து இருக்கலாம். தேவை இல்லாமல் இது நடந்திருக்கிறது” என்று அமித்ஷா கூறினார்.

அமித்ஷாவே துப்பாக்கி சூடு சம்பவத்தை சுட்டிக் காட்டி தமிழக அரசை விமர்சித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலர்,  தமிழக அ.தி.மு.க. தலைமை பாரதிய ஜனதாவுக்கும், மத்திய அரசுக்கும் ஏவல் ஆட்களாக இருக்கிறார்கள் என்று அடிக்கடி கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா அகில இந்திய தலைமை தமிழக அரசை விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது