குஜராத் கலவர வழக்கில் அமித் ஷாவுக்கு சம்மன் !

 

கமதாபாத்

குஜராத் மாநிலத்தில் 2002ல் நடந்த ஒரு கலவர வழக்கில் சாட்சி சொல்வதற்கு பா ஜ க தலைவர்  அமித் ஷாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2002ஆம் வருடம் குஜராத் மாநிலத்தில் பல கலவரங்கள் நடந்ததும், பல பேர் கலவரங்களில் கொல்லப்பட்டதும் தெரிந்ததே.  அப்போது அகமதாபாத் புறநகர் பகுதியான நரோடா என்னும் இடத்தில் ஒரு கலவரத்தில் 11 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாக ஒரு வழக்கு நடந்து வருகிறது.  அந்த வழக்கில் மாயா கோத்னானி என்னும் பெண் மருத்துவர் முக்கிய குற்றவாளி ஆவார்.  இவர் குஜராத் மாநில பா ஜ க வில் பெரும் புள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நரோடா பாதியா என்னும் இடத்தில் 100 இஸ்லாமியர் கொல்லப்பட்ட வழக்கில் மாயா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  தற்போது மற்றொரு வழக்கான 11 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட கலவர வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  இது நடந்த நரோடா என்னும் இடம் அகமதாபாத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது.

வழக்கு விசாரணையில் தான் கலவரம் நடைபெற்ற சமயத்தில் அகமதாபாத்தில் அவர் நடத்தும் மருத்துவமனையில் இருந்ததாக கூறி உள்ளார்.  அத்துடன் அப்போது அந்த மருத்துவமனையில் அமித் ஷா மற்றும் பலர் தன்னுடன் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.   கலவரம் நடந்த காலத்தில் மாயா, அமித் ஷா இருவருமே குஜராத் சட்டமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  அதன் பிறகு 2009 வரை அவர் குஜராத் மாநில பெண்கள் மற்றும் குழந்தகள் முன்னேற்ற துறை அமைச்சராக இருந்தார்.   2009 ல் அவர் கைது செய்யப்பட்டதால் பதவி இழந்தார்.

தனக்கு ஆதரவாக சாட்சி சொல்ல வேண்டும் என்பதற்காக பலமுறை அமித் ஷாவை சந்திக்க முயன்றும் முடியவில்லை என நீதிமன்றத்தில் மாயா தெரிவித்தார்.  மேலும் தான் கலவர நேரத்தில் அந்த இடத்தில் இல்லை என்பதற்கு அமித் ஷாவும் சாட்சி என கூறினார்.  அதையொட்டி நீதி மன்றம் அமித் ஷாவுக்கு வரும் திங்கட்கிழமை நேரில் ஆஜராகவேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளது.  தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் வர முடியவில்லை எனில் ஒரு வக்கீல் மூலம் மாயா சொல்வது பற்றி பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.