Random image

ஊழல்!: அமி்த்ஷா சொன்னது தி.மு.கவையும் தினகரனையும்தானாம்!: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

“ஊழல் மிகுந்த மாநிலம் தமிழ்நாடு என்று அமித்ஷா கூறவில்லை. எச்.ராஜா தவறாக மொழிபெயர்த்துவிட்டார். தேர்தலில் ஊழல் நடக்கிறது என்று தி.மு.க. மற்றும் தினகரனத்தைத்தான் அமித்ஷா குறிப்பிட்டார்” என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா வரும் 2019-இல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். இதற்காக தமிழகப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக சென்னைக்கு நேற்று திங்கள்கிழமை  வந்தார்.

ஆலோசனைக்குப் பிறகு  மேடையேறி  நிர்வாகிகளிடையே பேசினார்.

அவரது பேச்சை எச்.ராஜா மொழிபெயர்த்தார்.

அமித்ஷா  பேசும்போது, “தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் நமது எதிரணியினர் கிண்டலும், கேலியும் செய்கின்றனர்.  . அவர்களுக்கு, வரும் விருந்தினரை காத்திருந்து வரவேற்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்ற திருக்குறளை நினைவுகூற விரும்புகிறேன்   இப்போது இங்கே கூடியிருக்கும் பாஜக நிர்வாகிகளின் எண்ணிக்கை மட்டுமே 15 ஆயிரம் என்றிருக்கும் நிலையில், 2019 மார்ச் மாதத்துக்கு முன்பாகவே தமிழகத்தில் பாஜக எங்கிருக்கிறது என்பதை அந்த எதிரணியினர் நிச்சயம் தெரிந்து கொள்வர்” என்றார்.

 

 

மேலும், “தமிழகத்தின் நிலையைப் பார்க்கும் போது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. ஆகவே நாம் தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியைக் கொண்டுவர உறுதியேற்க வேண்டும். தேர்தலில் ஊழல், ஓட்டுக்குப் பணம் என்ற நிலையிலிருந்து தமிழகத்தை மீட்கும் பொறுப்பு நமக்கு உள்ளது.  வாக்காளர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு அரசு மீதான அமித்ஷாவின் குற்றச்சாட்டு குறித்து சற்றுமுன், தமிழக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு ஜெயக்குமார், “தங்களது கட்சியை வளர்க்க வேண்டும் என்று அவர் தமிழகம் வருகிறார். பேசுகிறார்.  இவர் இந்தியில் பேசியிருக்கிறார். அது யாருக்கும் புரியாது.

தேர்தலில் ஊழல் நடக்கிறது அதைத் தடுக்க வேண்டும் என்றுதான் அமித்ஷா பேசினார். திருமங்கலம் பார்முலாவை அறிமுகப்படுத்திய தி.மு.க.வையும், நோட்டுக்கு டோக்கன் கொடுத்த தினகரனையும்தான் அவர் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஆனால் அவரது பேச்சை மொழி பெயர்த்த ராஜா தவறாக மொழிபெயர்த்துவிட்டார்.

நுண்ணீர் பாசனம் என்று அமித்ஷா கூறியதை சிறுநீர் பாசனம் என்று மொழியபர்த்தவர்தான் ராஜா.

ஆகவே தமிழ்நாடு அரசு குறித்து அமித்ஷா ஏதும் குற்றம்சாட்டவில்லை.

மற்றபடி அரசுத்துறையை அல்லது மாநில அரசை அவர் குற்றம்சாட்டியிருந்தால் நாம் பதில் சொல்லலாம். அப்படி இல்லாத நிலையில் பதில் சொல்ல தேவையில்லை” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.