சோராபுதின் என்கவுண்டரும் அமித்ஷாவின் ஆதாயமும் : அதிர்ச்சி தகவல்

காந்திநகர்

குஜராத் சோராபுதீன் போலி என்கவுண்டரால் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆதாயம் அடைந்துள்ளதாக முன்னாள் சிபிஐ அதிகாரி அமிதாப் தாக்குர் தெரிவித்துள்ளார்.


கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சோராபுதின் ஷேக் என்பவர் குஜராத் மாநில காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். அந்த என்கவுண்டர் போலியானது எனவும் அவர் வேறு பல காரணங்களுக்காக காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இது குறித்த வழக்கு விசாரணை காந்திநகர் சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் சிபிஐ அதிகாரி அமிதாப் தாக்குர் நேற்று விசாரணை செய்யப்பட்டார். அப்போது அவர், “இந்த என்கவுண்டர் நடந்த போது குஜராத் உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவி வகித்து வந்தார். இந்த போலி என்கவுண்டரால் அவர் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் ஆதாயம் அடைந்தார்” எனக் கூறினார்.

அமிதாப் தாக்குர் மேலும், “இந்த விவகாரத்தில் அமித்ஷா மட்டுமின்றி முன்னாள் டிஐஜி வன்சரா, முன்னாள் உதயப்பூர் சூப்பிரண்ட் தினேஷ், முன்னாள் அகமதாபாத் சூப்பிரண்ட் ராஜ்குமார் பாண்டியன், மற்றும் அகமதாபாத் துணை ஆணையர் அபே உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளும் ஆதாயமடைந்துள்ளனர்.

அகமதாபாத் நகரில் உள்ள பாப்புலர் பில்டர்ஸ் நிறுவன அதிபர்கள் படேல் சகோதரர்கள் அமித்ஷாவுக்கு ரூ. 70 லட்சம் அளித்தனர். அவர்கள் பணம் தரவில்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டப்பட்டனர். அத்துடன் வன்சராவுக்கு படேல் சகோதரர்கள் ரூ. 60 லட்சம் கொடுத்தன.ர்

தற்போது வழக்கில் சிக்கி உள்ள எந்த காவல் அதிகாரியும் இந்த போலி என்கவுண்டரால் எவ்வித ஆதாயமும் பெறவில்லை. சோராபுதீனை கொல்ல எந்த ஒரு அரசியல் காரணமும் இருந்ததாக எங்கள் விசாரனையில் தெரியவில்லை. தற்போது வழக்கில் சிக்கி உள்ள அனைவரும் தங்கள் மூத்த அதிகாரிகளான வன்சரா, தினேஷ், பாண்டியன் மற்றும் அபே ஆகியோர் சொற்படி நடந்துக் கொண்டனர்.

சோராபுதின் உடலில் 8 குண்டுகள் இருந்ததாக அவர் சகோதரர் தெரிவித்தது தவறாகும். அவர் உடலில் இருந்து ஒரு குண்டு மட்டுமே எடுக்கப்பட்டது. மேலும் இரு குண்டுகள் அவர் உடலைக் கிழித்துக் கொண்டு வெளியேறி உள்ளது. ஆனால் அந்த குண்டுகள் சம்பவம் நடந்த இடத்தில் கிடைக்கவில்லை.” என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது வட மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் வேளையில் ஆளும் கட்சியின் தேசியத் தலைவர் குறித்த இச்செய்தி தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.