சாய்னா நேவாலை நேரில் சந்தித்த அமித் ஷா: அரசியலுக்கு இழுக்க முயற்சியா?

ஐதராபாத்:

பிரபல மேட்மின்டன் வீராங்கனை சாய்நேவாலை, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாய்னாவை பாஜகவுக்கு இழுக்கும் முயற்சி என்று விமர்சிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதேவேளையில் 4 ஆண்டு கால ஆட்சி முடிவுறும் தருவாயில் பாஜக மத்திய அரசு உள்ளது. இந்த நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் பாஜக களமிறங்கி உள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களுக்கு சென்று தேர்தல் குறித்து பாஜக தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், தற்போது  தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ‘சம்பா்க் சே சமா்தான்’ என்ற திட்டத்தின் கீழ் தலைவா்கள், அமைச்சா்கள் முக்கிய பிரமுகா்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில்  அமித் ஷா நேற்று ஐதராபாத்தில் உள்ள இந்திய இறகு பந்து வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் சாய்னாவுடன் தனியாகவும் ஆலோசனை நடத்தினார். அப்போது  மோடி அரசின் 4 ஆண்டுகால பயணம் குறித்து விளக்கி கூறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்து அமித் ஷா, சாய்னா நேவால் என இருவரும் தனித்தனியே தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளனர்.

அமித்ஷா சாய்னாவில் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து பேசியது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலை கருத்தில்கொண்டு பிரபலமான  சாய்னாவை பாஜகவுக்கு இழுக்கவும், பிரசாரத்திற்கு பயன்படுத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.